Published : 09 Apr 2021 03:13 AM
Last Updated : 09 Apr 2021 03:13 AM

திருச்சி - தஞ்சாவூர் சாலையில் பால்பண்ணை சந்திப்பில் ஃப்ரீ லெப்ட் பாதை: திட்ட மதிப்பீடு தயாராகி வருவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தகவல்

திருச்சி

தஞ்சாவூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பழைய பால்பண்ணை சந்திப்பில் சென்னை- மதுரை தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலைக்குச் செல்ல ஃப்ரீ லெப்ட் அமைக்க திட்ட மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு வருவதாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

தஞ்சாவூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலை அரியமங்கலம் பழைய பால்பண்ணை அருகே நிறைவடைகிறது. இந்த வழித்தடம் வழியாக வந்து பால்பண்ணை சந்திப்பிலிருந்து இடதுபுறம் திரும்பி மதுரையை நோக்கி (சென்னை-மதுரை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிச் செல்லும் சர்வீஸ் சாலை வழியாக) செல்ல ஃப்ரீ லெப்ட் பாதை வசதி இல்லை.

இதனால், இந்த சந்திப்பில், இடதுபுறம் திரும்பி மதுரையை நோக்கிச் செல்லும்வாகனங்கள், மேம்பாலத்தைக் கடந்து வலதுபுறம் திரும்பி சென்னையை நோக்கி செல்லும் வாகனங்கள், நேராக சென்று காந்திமார்க்கெட் வழியாக சத்திரம் பேருந்து நிலையம் செல்லும் வாகனங்கள் என அனைத்தும் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

இதுதொடர்பாக ‘இந்து தமிழ்’ நாளிதழிலும் புகைப்படத்துடன் செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து ஃப்ரீ லெப்ட் பாதை அமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் போதுமானதாக இல்லை.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி நுகர்வோர் மற்றும் சேவை சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் எம்.சேகரன் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு கடந்த ஜனவரி மாதம் மனு அனுப்பியிருந்தார்.

இந்த மனுவுக்கு பதிலளிக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தின் திருச்சி கோட்ட திட்ட இயக்குநர் ஜி.அதிபதி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். இதில் தெரிவிக்கப்பட்ட விவரங்கள் குறித்து எம்.சேகரன் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது:

தஞ்சாவூரிலிருந்து வரும் வாகனங்கள், சென்னை- மதுரை தேசிய நெடுஞ்சாலையை அடைய, பழைய பால்பண்ணை ரவுண்டானாவில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. இதை தவிர்க்கும் வகையில் இந்த பகுதியில் ஃப்ரீ லெப்ட் பாதை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தோம்.

இதைத் தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்ட இயக்குநர் அனுப்பியுள்ள கடிதத்தில், எங்களது கோரிக்கையை ஏற்று, ஃப்ரீ லெப்ட் அமைக்க மதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருவதாகவும், தற்காலிகமாக சாலையின் இடதுபுறம் உள்ள கழிவுநீர்க் கால்வாயை அகற்றி விட்டு, 30 மீட்டர் நீளத்துக்கு இடதுபுறம் 2 மீட்டர் அளவுக்கு சாலையை அகலப்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மதுரை – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சஞ்சீவி நகர் சந்திப்பில் உயர் கோபுர மின் விளக்கு (ஹைமாஸ் லைட்) அமைக்க வேண்டும் எனவும் கோரியிருந்தோம்.

அந்த பகுதியில் ஒரு சூரிய சக்தி மின் விளக்கு மற்றும் இரு சூரிய சக்தியில் இயங்கும் பிளிங்கர் விளக்குகள் அமைக்கப்படும் எனவும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் இந்த நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x