Published : 09 Apr 2021 03:13 AM
Last Updated : 09 Apr 2021 03:13 AM
திருவாரூர் மாவட்டத்தில் வேளாண் கல்லூரி மற்றும் வேளாண் சார்ந்த தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும் என்ற நீண்ட நாளைய கோரிக்கையை, அமைய உள்ள புதிய அரசாவது நிறைவேற்றித் தரவேண்டுமென இப்பகுதி இளைஞர்கள், பட்டதாரிகள் எதிர்பார்த்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 3.5 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் உள்ளன. இங்கு சுமார் 6 லட்சம் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்கள் முழுவதும் விவசாயத் தொழிலையே நம்பியுள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் வேளாண்மை கல்லூரி, வேளாண்மை சார்ந்த தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி இளைஞர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. தேர்தல் வரும்போது மட்டும், இந்தக் கோரிக்கைகளை நிச்சயம் நிறைவேற்றுவோம் என அரசியல் கட்சியினர் வாக்குறுதி அளித்தாலும், அவை இதுவரை நிறைவேற்றப்படாமலேயே உள்ளன.
எனவே, தற்போது அமைய உள்ள புதிய அரசாவது இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என திருவாரூர் மாவட்ட இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து மன்னார்குடி ஜேசிஐ அமைப்பின் தலைவர் மரிய சிரில் ஸ்டனிஸ் கூறியதாவது: தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அரசு அறிவித்தது. ஆனால் அதற்கான எந்த முன்னெடுப்பையும் செய்யவில்லை.
எனவே தேர்தலுக்குப் பிறகு அமையும் புதிய அரசு, இப்பகுதியில் வேளாண்மை கல்லூரி மற்றும் வேளாண்மைக்கு பயன்படும் உபகரணங்களை கண்டறிந்து தயாரிப்பதற்கான ஆராய்ச்சி மையம் போன்றவற்றை அமைக்க வேண்டும் என்றார்.
பொறியியல் பட்டதாரி கார்த்திக் கண்ணன் கூறியதாவது: எனக்கு விவசாயத்தில் ஆர்வம் உள்ளபோதும், இத்தொழிலில் வருமானம் குறைவு என்பதால் வேறு வேலைக்கு சென்றுவிட்டேன். தற்போது வேளாண் உற்பத்திபொருட்களை மதிப்பு கூட்டி, சந்தைப்படுத்தினால் நல்ல லாபம் கிடைக்கும் என்ற நிலை உள்ளது.
அதற்கு பயிற்சி அளிக்க திருவாரூர் மாவட்டத்தில் நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையம் தவிர வேறு அமைப்புகள் இல்லை. சிறப்பு வேளாண் மண்டலம் அறிவிப்புக்குப் பிறகும் இதுபோன்ற பயிற்சி களங்களை அமைக்காமல் இருப்பது கவலையளிக்கிறது. எனவே, தற்போது அமைய உள்ள புதிய அரசாவது, இப்பகுதி மக்களின் 20 ஆண்டுகால எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் வேளாண் சார்ந்த தொழிற்சாலைகள், பயிற்சி மையங்கள், கல்லூரிகள் அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT