Last Updated : 09 Apr, 2021 03:13 AM

 

Published : 09 Apr 2021 03:13 AM
Last Updated : 09 Apr 2021 03:13 AM

ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி நிதி ரூ.2,639 கோடியில் கல்லணைக் கால்வாய் புனரமைப்பு பணி தீவிரம்: கடைமடை பகுதியின் தண்ணீர் பற்றாக்குறையைப் போக்க நடவடிக்கை

தஞ்சாவூர்

கடைமடை பகுதியின் தண்ணீர் பற்றாக்குறையைப் போக்கும் வகையில், ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் நிதி உதவியுடன் ரூ.2,639.15 கோடி மதிப்பில் கல்லணைக் கால்வாய் புனரமைப்பு திட்டப் பணிகள் தொடங்கப்பட்டு, தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தஞ்சாவூர் மாவட்டத்தில் வானம் பார்த்த பூமியாக காணப்பட்ட பூதலூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி வட்டம் ஆகிய பகுதிகளுக்கு கல்லணையிலிருந்து பாசன வசதியை உருவாக்குவதற்காக, 1928-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கல்லணைக் கால்வாய் வெட்டப்பட்டது.

இதில், 148 கி.மீ தொலைவுக்கு முதன்மை வழித்தடமும், 636 கி.மீ தொலைவுக்கு கிளை வாய்க்கால்களும் வெட்டப்பட்டன. மேலும், 694 நீர்ப்பிடிப்பு ஏரிகளும் உருவாக்கப்பட்டன. இதன் மூலம் 2.27 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

தொடக்கத்தில் இந்தக் கால்வாயில் பாசனத்துக்காக கல்லணையிலிருந்து விநாடிக்கு 4,200 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. அதன் பிறகு கரைகள் பலவீனமானதால், 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்தாலே, கரைகளில் உடைப்பு ஏற்படுவது வழக்கமாகிவிட்டது.

இதனால், ஆண்டுதோறும் கடைமடைக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதால், கல்லணைக் கால்வாயை முறையாக புனரமைப்பு செய்ய வேண்டும் என பல ஆண்டுகளாக விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த கோரிக்கையின் அடிப்படையில், கல்லணைக் கால்வாயை 16 தொகுப்புகளாக புனரமைப்பு செய்வதற்கான திட்டத்தை, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் ரூ.2639.15 கோடி நிதியுதவியுடன் செயல்படுத்த தமிழக அரசு ஒப்புதல் வழங்கியது. தொடர்ந்து, இதற்கான பணியை கடந்த பிப்.14-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் தொடங்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து பணிகள் தொடங்கப்பட்டு, கல்லணைக் கால்வாயில் சிமென்ட் தளம் அமைப்பது, கரையைப் பலப்படுத்துதல் போன்ற பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து கல்லணைக் கால்வாய் உதவி செயற்பொறியாளர் சண்முகவேல் கூறியது:

ரூ.2,639.15 கோடி மதிப்பிலான இத்திட்டத்தின் கீழ் 16 தொகுப்புகளாக பணிகள் பிரிக்கப்பட்டு, 100 கி.மீ தொலைவுக்கு கல்லணைக் கால்வாயில் கான்கிரீட் லைனிங் அமைக்கும் பணி, 1,339 மதகுகளை திரும்பக் கட்டும் பணி, 21 கால்வாய் நீர்வழிப் பாலங்களை திரும்பக் கட்டும் பணி, 12 கால்வாய் நீர்வழிப் பாலங்களை சீரமைக்கும் பணி, 24 நீரொழுங்கிகளை திரும்பக் கட்டும் பணி, ஒரு நீரொழுங்கி புதிதாக கட்டும் பணி, 20 பாலங்கள் புதிதாக கட்டும் பணி, 10 பாலங்களை சீரமைக்கும் பணி, 308 ஏரிகளை புனரமைக்கும் பணி ஆகியவை நடைபெற உள்ளன.

இந்தப் பணிகள் நிறைவடைந்தால், தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் 2 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் எந்தத் தடையுமின்றி பாசன வசதியைப் பெற முடியும். இத்திட்டப் பணிகளை 3 ஆண்டுகளில் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. வழக்கமாக, கடைமடைக்கு தண்ணீர் செல்ல 2 வாரங்கள் ஆகும் நிலையில், இப்பணிகள் நிறைவுபெற்றதும், ஒரு வாரத்திலேயே கடைமடைக்கு தண்ணீர் செல்லும். மேலும், தண்ணீர் பூமிக்குள் இறங்கும் வகையில், ஆங்காங்கே கசிவுநீர் குழிகளும் அமைக்கப்பட்டுள்ளன என்றார்.

தடுப்பணை அமைக்க கோரிக்கை

கல்லணைக் கால்வாயில் சிமென்ட் தளம் அமைக்கும் நிலையில், தண்ணீர் பூமிக்குள் இறங்க வாய்ப்பில்லாமல் உள்ளது. இதனால், கல்லணைக் கால்வாயில் ஒரு சில இடங்களில் தடுப்பணைகளை அமைத்தால், நிலத்தடி நீர்மட்டம் உயர்வதுடன், கோடைக்காலத்தில் தண்ணீர் தேங்கி கால்நடைகளுக்கும் பயன்படும். எனவே, ஆங்காங்கே தடுப்பணைகளை அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x