Published : 09 Apr 2021 03:13 AM
Last Updated : 09 Apr 2021 03:13 AM
திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருவதால் நோய் தடுப்புப்பணி கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் பிசிஆர் பரிசோதனையை அதிகரிக்க சுகாதாரத்துறையினர் நடவ டிக்கை எடுத்துள்ளனர்.
தமிழகத்தில் கரோனா பாதிப்பு தினசரி 4 ஆயிரத்தை எட்டியுள்ளது. சென்னை பெரு நகரத்தில் மட்டும் நேற்று முன்தினம் 1,460 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை மட்டுமின்றி செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், கோவை, சேலம், மதுரை, நாகப்பட்டினம், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கரோனா பாதிப்பு தினசரி அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், கரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளுடன் நேற்று அறிவித்தது. கரோனா பரவலை கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் ஏப்ரல் 30-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை பல் வேறு தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
சென்னை பெருநகரில் தினசரி கரோனா பரவல் அதிகரித்து வருவதால் சென்னையையொட்டியுள்ள மாவட்டங்களிலும் கரோனா பரவல் தினசரி அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர். கடந்த சில மாதங்களாக ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் குறைந்து காணப்பட்ட கரோனா பாதிப்பு தற்போது அதிகரித்து வருவது மக்களை அச்சுறுத்தி வருகிறது.
கடந்த ஆண்டு வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கரோனா பரவல் உச்சத்தில் இருந்தபோது திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா பரவல் கட்டுக்குள் இருந்தது. ஆனால், தற்போது கரோனா 2-வது அலை தொடங்கிய பிறகு திருப்பத்தூர் மாவட்டத்தில் தினசரி பாதிப்பு எதிர்பார்க்காத அளவுக்கு அதிகரித்து வருகிறது.
சட்டப்பேரவைத் தேர்தல் காரணமாக வெளியூர், வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் வந்து சென்றதால் பெருந் தொற்று அதிகரித்துள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தற்போது, தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந் துள்ளதால் கரோனா பரவலை முழு அளவில் கட்டுப்படுத்த வேண்டும் என்றும், நோய் தடுப்புக்கணக்கான பணிகளை முழு வீச்சில் தொடங்க வேண்டும், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என ஆட்சியர் சிவன்அருள் அறிவுறுத்தியுள்ளார்.
அதேநேரத்தில், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகளில் நோய் தடுப்புப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் நேற்று உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடி ஆகிய நகராட்சிப் பகுதிகளில் கரோனா தொற்று தடுப்புப்பணிகள் நேற்று தீவிரப்படுத்தப்பட்டன.
வாணியம்பாடி நகராட்சி சுகாதார அலுவலர் கணேஷ், வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் பசுபதி தலைமையில் நகராட்சிக்கு உட்பட்ட 1-வது வார்டில் நேற்று கரோனா தடுப்புப்பணிகள் தீவிரப் படுத்தப்பட்டன.
வாணியம்பாடி நகராட்சி 1-வது வார்டு முழுவதும் நகராட்சி தூய்மை பணியாளர்கள் கிருமி நாசினி தெளித்தனர். காய்ச்சல், இருமல், சளி தொந்தரவு உள்ள பொதுமக்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
கபசுர குடிநீர் விநியோகம்
வாணியம்பாடி நகராட்சி நிர்வாகம் சார்பில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கபசுர குடிநீர் விநியோகம், கரோனா பரிசோதனை முகாமுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதே போல, திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும் கரோனா தொற்று தடுப்புப்பணிகளை சுகாதாரத் துறையினர் நேற்று முதல் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இது குறித்து திருப்பத்தூர் மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் மருத்துவர் செந்தில், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறும்போது, ‘‘திருப்பத்தூர் மாவட்டத்தில் இதுவரை 4,94,727 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 7,939 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில், 132 பேர் மட்டுமே அரசு மருத்துவமனையில் கரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 20 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 7,679 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட 4,453 நபர்கள் கரோனா முடிவுக்காக காத் திருக்கின்றனர். கரோனா பரவல் காரணமாக 104 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதி களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
மாவட்டம் முழுவதும் கரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த 622 பேர் வீடுகளிலேயே தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு முதல் இதுவரை 128 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் இதுவரை 30,764 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தேவையான அளவுக்கு கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் இருப்புள்ளன.
மாவட்டம் முழுவதும் 4 அரசு மருத்துவமனைகள், 37 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற சுகாதார நிலையம், மேம்படுத்தப்பட்ட அரசு சுகாதார மையங்கள், 44 அம்மா மினி கிளினிக்குகளில் இலவசமாக கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 5 தனியார் மருத்துவமனைகளில் கட்டண அடிப்படையிலும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
எனவே, 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள், கரோனா தடுப்பூசி இதுவரை போடவில்லை என்றால் உடனடியாக அருகேயுள்ள அரசு மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். மேலும், தொற்று பரவலை கட்டுப்படுத்த மாவட்ட சுகாதாரத்துறைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT