Published : 08 Apr 2021 05:53 PM
Last Updated : 08 Apr 2021 05:53 PM

அரக்கோணம் இரட்டைக் கொலை; மர்ம நபர்கள் டிராக்டருக்குத் தீ வைப்பு- இருவர் கைது

பெருமாள்ராஜபேட்டையில் ராஜவேலு என்பவருக்குச் சொந்தமான டிராக்டர் தீ வைத்து எரிக்கப்பட்டது.

அரக்கோணம்

அரக்கோணம் அருகே 2 இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து மர்ம நபர்கள் டிராக்டருக்குத் தீ வைத்தனர். கொலை தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அரக்கோணம் அருகே தேர்தல் முன்விரோதத் தகராறில் அர்ஜூனன் (26), சூர்யா (26) ஆகிய இரு இளைஞர்கள் கொலை செய்யப்பட்டதால், இருதரப்பினர் இடையில் பதற்ற சூழல் ஏற்பட்டது. அங்கு ராணிப்பேட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சிவகுமார் தலைமையில் பாதுகாப்புக்காக அதிகளவில் காவலர்கள் குவிக்கப்பட்டனர்.

இதுதொடர்பாக சோகனூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கூறும்போது, ‘‘தேர்தலில் பானை சின்னத்துக்கு வாக்குச் சேகரித்த புகாரின்பேரில் இளைஞர்கள் இருவரையும் கொலை செய்துள்ளனர். இதில் தொடர்புடைய 20 பேரின் பட்டியலை காவல் துறையினரிடம் அளித்துள்ளோம். அனைவரையும் கைது செய்ய வேண்டும்’’ என்று தெரிவித்தனர்.

இரட்டைக் கொலை சம்பவத்தைத் தொடர்ந்து பெருமாள்ராஜபேட்டை கிராமத்தில் ராஜவேலு என்பவரது வயல் வெளியில் சேமித்து வைத்திருந்த நெல்லையும் அருகில் இருந்த டிராக்டரையும் மர்ம நபர்கள் தீ வைத்து எரித்த சம்பவத்தால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.

இந்த மோதல் சம்பவம் தொடர்பாக ராணிப்பேட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சிவகுமாரைத் தொடர்புகொண்டு கேட்டதற்கு, ‘‘கொலை வழக்கில் தொடர்புடைய நபர்களைத் தேடி வருகிறோம். இரண்டு பேர் பிடிபட்டுள்ளனர்.

மோதல் குறித்த தகவல் கிடைத்ததும் இரண்டு கிராமங்களிலும் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். டிராக்டர் மற்றும் சேமிக்கப்பட்டிருந்த நெல்லைத் தீ வைத்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், முன்கூட்டியே காவல்துறையினர் நிறுத்தப்பட்டதால் எதிர் தரப்பினர் யாரும் வயல்வெளியில் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டரைச் சேதப்படுத்தியிருக்க வாய்ப்பில்லை. இருந்தாலும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’’ என்று தெரிவித்தார்.

சோகனூரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சிவகுமார்.

இதற்கிடையில், சோகனூர் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட தகவலால் நேற்று இரவு தொடங்கி இன்று (ஏப்-8) பகல் வரை குருவராஜபேட்டை- திருத்தணி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். கொலை வழக்கில் தொடர்புடையவர்களைக் கைது செய்ய நான்கு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளன. பெருமாள்ராஜப்பேட்டையைச் சேர்ந்த மதன் (37), அஜித் (24) ஆகியோரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x