Published : 08 Apr 2021 04:13 PM
Last Updated : 08 Apr 2021 04:13 PM
தமிழக லஞ்ச ஒழிப்பு துறை அரசியல் கட்சிகளிடமிருந்து விலகி சுதந்திரமாக செயல்படுகிறதா? கடந்த 3 ஆண்டுகளில் எத்தனை ஊழல் வழக்குகளை லஞ்ச ஒழிப்பு துறை கையாண்டுள்ளது? என அரசு 3 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2018 ம் ஆண்டு வில்லிவாக்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத 70 ஆயிரத்து 60 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து வில்லிவாக்கம் சார் பதிவாளர் கோபால கிருஷ்ணன் தூத்துக்குடி சார் பதிவாளர் அலுவலகத்திற்கு மாற்றப்பட்டார்.
2019 ம் ஆண்டு தமிழக அரசு பிறப்பித்த இடமாறுதல் அரசாணையில், லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான சார் பதிவாளர் கோபால கிருஷ்ணனை செங்கல்ப்பட்டு மாவட்ட சார் பதிவாளராக நியமனம் செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த இடமாற்றம் சட்ட விதிகளுக்கு புறம்பானது என்றும், லஞ்சம் பெற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும், இடமாறுதல் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என கருப்பு எழுத்து கழகம் என்ற அமைப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு குறித்து தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்திய தலைமை நீதிபதி அமர்வு, ‘‘புற்றுநோயாக ஊழல் நம்மை கொல்கிறது, நில அபகரிப்புகள் நடக்கிறது. நீர்நிலைகள் மாயமாகிறது’’ என அதிருப்தி தெரிவித்தனர்.
பின்னர் தமிழக லஞ்ச ஒழிப்பு துறை அரசியல் கட்சிகளிடமிருந்து விலகி சுதந்திரமாக செயல்படுகிறதா?, கடந்த 3 ஆண்டுகளில் எத்தனை ஊழல் வழக்குகளை லஞ்ச ஒழிப்பு துறை கையாண்டுள்ளது? என 3 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment