Published : 08 Apr 2021 03:22 PM
Last Updated : 08 Apr 2021 03:22 PM

அரக்கோணம் அருகே முன்விரோதத் தகராறில் 2 இளைஞர்கள் கொலை; பதற்ற சூழலால் காவல்துறையினர் குவிப்பு

சூர்யா, அர்ஜூனன்

அரக்கோணம்

அரக்கோணம் அருகே தேர்தல் முன்விரோதத் தகராறில் இளைஞர்கள் இருவர் கொலை செய்யப்பட்டதால், இருதரப்பினர் இடையில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. அங்கு ராணிப்பேட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சிவகுமார் தலைமையில் பாதுகாப்புக்காக அதிகளவில் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்துள்ள சோகனூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அர்ஜூனன் (26), சூர்யா (26), மதன், வல்லரசு, சவுந்தர்ராஜன் ஆகியோர் குருவராஜப்பேட்டையில் உள்ள கடை ஒன்றின் முன்பாக நேற்று (ஏப். 07) மாலை நின்று கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாகச் சென்ற பெருமாள்ராஜபேட்டை கிராமத்தைச் சேர்ந்த மாற்று சமூகத்தினரை இவர்கள் ‘ஹாய்’ என்று கூறி அழைத்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த அவர்கள் ‘எங்களை எப்படி அழைக்கலாம்’ என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் கைகலப்பில் ஈடுபட்டனர். பிறகு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதற்கிடையில், கவுதம்நகர் பகுதியில் இரவு 8 மணியளவில் அர்ஜூனன், சூர்யா, மதன், சவுந்தர் உள்ளிட்டோர் மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த பெருமாள் ராஜபேட்டை பகுதியைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருதரப்பினரும் மோதிக்கொண்ட நிலையில், சோகனூரைச் சேர்ந்த அர்ஜூனன், சூர்யா, மதன், சவுந்தர் உள்ளிட்டோரை பெருமாள்ராஜபேட்டை இளைஞர்கள் சராமரியாகத் தாக்கினர். இதில் படு காயம் அடைந்தவர்கள் திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில், பீர் பாட்டிலால் குத்தப்பட்ட நிலையில் அர்ஜூனன் மற்றும் சூர்யா ஆகியோர் ஏற்கெனவே இறந்துவிட்டது தெரியவந்தது. இதில், அர்ஜூனனுக்குத் திருமணமாகி 10 நாட்கள்தான் ஆகியுள்ளன. மதன், வல்லரசு, சவுந்தர்ராஜ் ஆகியோர் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

இந்தத் தகவலை அடுத்து அரக்கோணம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மனோகரன், தாலுகா காவல் ஆய்வாளர் கோகுல்ராஜ் மற்றும் காவலர்கள் விரைந்து சென்று இறந்தவர்களின் உடலை மீட்டனர். பின்னர், இருவரின் உடலையும் பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இரு சமூகத்தினர் இடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் கொலை செய்யப்பட்ட தகவலால், சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள கடைகள் உடனடியாக அடைக்கப்பட்டன. காவல்துறையினர் பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டனர். வேலூர் சரக டிஐஜி காமினி,ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சிவகுமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை செய்தனர். கூடுதலாகக் காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு சோகனூர் மற்றும் பெருமாள் ராஜபேட்டையில் நிறுத்தப்பட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x