Published : 08 Apr 2021 03:24 PM
Last Updated : 08 Apr 2021 03:24 PM
மதுரை மற்றும் தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவமனையிலும் அவசர மருத்துவ பராமரிப்பு திட்டத்தின் படி " o " நொடிகளில் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில் தமிழக சுகாதாரத் துறைச் செயலர் பரிசீலிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த வேரோணிக்கா மேரி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில் "மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்த அக்டோபர் மாதம் எனது தாயாரை உடல்நல குறைவால் அனுமதித்தேன். கரோனா மற்றும் ரத்த பரிசோதனை செய்வதற்கு கால தாமதம் ஆனதால் எனது தாயார் உயிரிழந்தார்.
சென்னை ராஜிவ் காந்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு "அவசர மருத்துவ பராமரிப்பு திட்டம்"-ன் படி தாமதமின்றி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, இதனால், உயிரிழப்புகள் தடுக்கப்படுகிறது. அதுபோன்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மற்றும் தமிழகம் முழுவதும் அனைத்து அரசு மருத்துவமனைகளில் அவசர மருத்துவ பராமரிப்பு திட்டத்தின் படி தாமதமின்றி சிகிச்சை அளிக்கப்பட்டால் பல உயிரிழப்புகள் தடுக்கப்படும்.
அதேப்போன்று அரசு ராஜாஜி மருத்துவமனையில் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் குழந்தைகள் சிகிச்சை பிரிவு செயல்பட வேண்டும். நோயாளிகளுக்கு அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி சிகிச்சை அளிக்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகள் தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.
எனவே, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மற்றும் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அவசர மருத்துவ பராமரிப்பு திட்டத்தின் தாமதமின்றி சிகிச்சை அளிக்கவும், குழந்தைகள் சிகிச்சை பிரிவு 24 மணி நேரமும் செயல்படவும் உத்தரவிட வேண்டும்." என கோரியிருந்தார்.
இந்த மனு உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை கரோனா சிகிச்சையில் மிக சிறப்பாக செயல்பட்டது. தற்போது கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
எனவே, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் குழந்தைகள் சிகிச்சைக்காக சிறப்பு பிரிவை ஏற்படுத்தி 24 மணி நேரமும் செயல்பட உரிய நடவடிக்கை எடுக்கவும், மனுதாரர் கோரிக்கை குறித்தும் தமிழக சுகாதாரத் துறை செயலர் பரிசீலிக்க வேண்டும்”. என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT