Published : 08 Apr 2021 12:33 PM
Last Updated : 08 Apr 2021 12:33 PM
புதுச்சேரியில் ஒரு மாதத்துக்குள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போடும் திட்டமுள்ளது என்று, துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். இந்நிலையில், ஆளுநர் மாளிகை செய்தித் தொடர்பாளருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகை முன்பு இன்று (ஏப்.08) ஆம்புலன்ஸ் சேவையைத் தொடங்கி வைத்து முருங்கப்பாக்கம் கலை கைவினை கிராமத்துக்குப் பார்வையிட துணைநிலை ஆளுநர் தமிழிசை புறப்பட்டார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"புதுச்சேரியில் கரோனா பரிசோதனை எண்ணிக்கை குறைக்கப்படவில்லை. புதுச்சேரியில் ஒரு மாதத்திற்குள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போடும் திட்டமுள்ளது. அனைத்து மருத்துவமனைகளிலும் பரிசோதனை செய்ய அறிவுறுத்தியுள்ளோம். இந்தியாவில் 11 மாநிலங்கள் அபாயகரமான கட்டத்தில் உள்ளன. அதில் புதுச்சேரி மாநிலம் இல்லை.
அதனால் ஊரடங்குக்கு தற்போது அவசியம் இல்லை. அந்த நிலைக்குத் தள்ளிவிடாமல் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். புதுச்சேரியில் தேவையான படுக்கை வசதிகள் உள்ளன. பொதுமக்களோடு அதிகம் தொடர்புடைய ஆட்டோ, டெம்போ மற்றும் பேருந்து ஓட்டுநர்களுக்கு கரோனா தடுப்பூசி வழங்கப்படவுள்ளது".
இவ்வாறு தமிழிசை தெரிவித்தார்.
செய்தித் தொடர்பாளருக்கு கரோனா:
இந்நிலையில், ஆளுநர் மாளிகை செய்தித் தொடர்பாளர் குமரனுக்கு கரோனா தொற்று உறுதியானது. அவர் சிகிச்சைக்காக ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக, ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் கூறுகையில், "புதுச்சேரி ஆளுநர் மாளிகை செய்தித் தொடர்பாளர் குமரன், உடல்நல பாதிப்பால் ஆளுநர் மாளிகை வரவில்லை. வீட்டில் இருந்தார். அவருக்கு நேற்று கரோனா தொற்று உறுதியாகி ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆளுநர் மாளிகை ஊழியர்கள் பரிசோதனை எடுத்துக்கொள்ளுமாறு தெரிவித்துள்ளோம்" என்று தெரிவித்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT