Published : 08 Apr 2021 12:26 PM
Last Updated : 08 Apr 2021 12:26 PM
தேர்தல் பிரச்சாரம், வாக்குப்பதிவு என்கிற பரபரப்பு ஓய்ந்த நிலையில் அடுத்த ஒரு மாதத்தில் என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இது தவிர மாவட்ட வாரியாக கட்சி செயலாளர்கள், வேட்பாளர்கள் ஆகியோரை அழைத்து ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் தேர்தல் நடைமுறை அமலானதிலிருந்து கூட்டணிக் கட்சிகளுக்கான இடம் ஒதுக்கீடு, தொகுதிப் பங்கீடு எனப் பரபரப்பாக ஓடியது திமுக கூட்டணி. தேர்தல் பிரச்சாரத்தில் பலவிதப் பிரச்சினைகள் திமுகவுக்குள் வந்தன. அவையெல்லாம் ஆங்காங்கே சரிசெய்யப்பட்டன. தேர்தல் வெற்றி ஒன்றே குறிக்கோள், வாக்குப்பதிவில் கவனம் செலுத்துங்கள் எனத் தலைமையால் அறிவுறுத்தப்பட்டது.
வாய்ப்பில்லாதவர்களுக்கு அடுத்து நல்ல வாய்ப்பு கிடைக்கும் என்று சமாதானம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஏப்.6-ம் தேதி வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. வாக்குப்பதிவு முடிந்தாலும் தேர்தல் பணி முடியவில்லை, வாக்கு எண்ணிக்கைக்கு ஒரு மாத இடைவெளி இருப்பதால் விழிப்புணர்வுடன் அனைவரும் இருக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில் இன்று ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் அவரிடம் கடந்த 3 மாதங்கள் குறிப்பாக ஒரு மாதத்தில் நடந்த கட்சி நடவடிக்கைகள் குறித்து அறிக்கையுடன் நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்களைச் சந்தித்தார் ஸ்டாலின்.
இந்தக் கூட்டத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் டி.ஆர்.பாலு, சுப்புலட்சுமி ஜெகதீசன், அந்தியூர் செல்வராஜ், எ.வ.வேலு உள்ளிட்டோர் உள்ளனர். துரைமுருகன் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ள மாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்களிடம் கள நிலவரங்களை ஸ்டாலின் கேட்டறிந்தார். இதில் கட்சிக்கு உள்ள பிரச்சினை, கூட்டணிக் கட்சியினர் ஒத்துழைப்பு, கட்சிக்குள் உள்ள திருப்தி, வேட்பாளர்களுக்குக் கட்சியினர் ஒத்துழைப்பு, வெற்றி வாய்ப்பு, தொகுதியில் உள்ள பிரச்சினை உள்ளிட்ட அனைத்தையும் கேட்கிறார்.
முக்கியமாக அடுத்து வரும் 23 நாட்களில் வாக்கு எண்ணிக்கை மையங்களைக் கண்காணிப்பது, வாக்கு எண்ணிக்கையின்போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள், தொகுதி மக்களுக்கு நன்றி சொல்வது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை அளித்ததாகக் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT