Published : 08 Apr 2021 03:13 AM
Last Updated : 08 Apr 2021 03:13 AM
நிலம்வழங்கியதற்கு ரூ.39.36 கோடி இழப்பீடு வழங்காததால், விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தை ஜப்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. பேச்சுவார்த்தையால் நடவடிக்கை கைவிடப்பட்டது.
விழுப்புரத்தைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ சண்முகத்திற்கு சொந்தமான 6 ஏக்கர் 75 சென்ட் இடத்தினை கடந்த 1991-ம் ஆண்டு, அரசு நிலஆர்ஜிதம் செய்து, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு வழங்கியது. இதில், அவரது மகன் சிவானந்தத்திற்கு அவரது பங்கான 1 ஏக்கர் 50 சென்ட் இடத்திற்கு சதுரஅடிக்கு தலா 8 ரூபாய் 10 பைசா என கணக்கிட்டு மொத்தம் ரூ.4,55,332வழங்கப்பட்டது. நிலம்கையகப் படுத்தியதற்காக வழங்கப்பட்ட இந்த தொகை சந்தைமதிப்பை விட குறைவாக இருப்பதாகக்கூறி சிவனானந்தம் விழுப்புரம் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் 2007-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.
இதே போல் சண்முகம் தனது பாகமான 1 ஏக்கர்50 சென்ட் இடத்திற்கு இழப்பீடுகேட்டு 2013-ம் அண்டு வழக்குதொடர்ந்தார்.இவ்வழக்குகளை விசாரித்த நீதிபதி கோபிநாதன்இரு வழக்குகளுக்கும் கடந்த 2018-ம் ஆண்டு இழப்பீட்டுத் தொகையைாக ரூ.39,36,59,337 வழங்கிட வேண்டுமென உத்தரவிட்டார். இழப்பீடு தொகையை வழங்காமல் காலதாமத படுத்தியதால் மீண்டும் சிவானந்தம், நீதிமன்றத்தில் கட்டளை நிறைவேற்று மனுதாக்கல் செய்தார்.
அந்த மனுவை விசாரித்த நீதிபதி இழப்பீட்டுத்தொகையை மூன்று மாதத்திற்குள், நீதிமன்றத்தில் டெபாசிட் செய்யவேண்டும். இல்லையென்றால் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அனைத்து அசையும் சொத்துக்களும், வீட்டுவசதி வாரியத்தில் உள்ள அசையும் சொத்துக்களையும் பறிமுதல் செய்ய கடந்த 2020ம்ஆண்டு உத்தரவிட்டிருந்தார். போதிய கால அவகாசம் கொடுத்தும், வீட்டுவசதிவாரிய அதிகாரிகள் இழப்பீட்டுத்தொகை வழங்கவில்லை. இதனால் நேற்று நீதிமன்ற ஊழியர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் பொருட்களை ஜப்தி செய்ய வந்தனர்.
உடனடியாக, ஆட்சியரின் நேர்முகஉதவியாளர்(பொது) மோகன், நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் சிவானந்தத்திடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.
மேலும், வீட்டுவசதிவாரிய அதிகாரிகளை வரவழைத்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது, இழப்பீட்டுத்தொகை வழங்க அவகாசம் கேட்டனர். இதற்கு, மனுதாரரும் ஒப்புக்கொண்ட நிலையில், ஜப்தி நடவடிக்கையை கைவிட்டுச்சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT