Published : 07 Apr 2021 10:04 PM
Last Updated : 07 Apr 2021 10:04 PM
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆயுதம் ஏந்திய காவலர்கள் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் வேலூர், காட்பாடி, அணைக்கட்டு, கே.வி. குப்பம்(தனி), குடியாத்தம்(தனி) ஆகிய 5 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், காட்பாடி தொகுதியில் 74 சதவீதமும், வேலூர் தொகுதியில் 70.25 சதவீதமும், அணைக்கட்டு தொகுதியில் 77.05 சதவீதமும், கே.வி.குப்பம் தொகுதியில் 76.50 சதவீதமும், குடியாத்தம் தொகுதியில் 72.56 சதவீதம் என சராசரியாக 73.98 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றது.
வேலூர் மற்றும் அணைக்கட்டு தொகுதியில் பதிவான வாக்குகள் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியிலும், காட்பாடி தொகுதியில் பதிவான வாக்குகள் காட்பாடி அரசு சட்டக் கல்லூரியிலும், குடியாத்தம் மற்றும் கே.வி குப்பம் தொகுதியில் பதிவான வாக்குகள் குடியாத்தம் ராஜகோபால் பாலிடெக்னிக்கிலும் எண்ணப்படுகிறது. இதற்காக அந்தந்த பகுதிகளில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த 3 மையங்களிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைப்பதற்கான ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த அறையின் உள்ளேயும், வெளியேயும் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் நேற்று 1,783 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு முடிந்தவுடன் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. இன்று காலை அனைத்து கட்சியினர் முன்னிலையில் அந்தந்த தொகுதிக்கு ஒதுக்கப்பட்டுள்ள அறைகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு பூட்டுபோடப்பட்டு அறைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. அந்த அறைகள் முன்பாக துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படையினரும், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் 3 சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.
வாக்கு எண்ணும் மையத்தின் நுழைவுவாயிலிலும் சட்டம் - ஒழுங்கு காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வேலூர், காட்பாடி, குடியாத்தம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 3 வாக்கு எண்ணும் மையங்களிலும் துணை ராணுவத்தினர், தமிழ்நாடு சிறப்பு காவல்படையினர், உள்ளூர் காவல் துறையினர் என 3 அடுக்கில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம்:
ராணிப்பேட்டை மாவட்டத்தில், ராணிப்பேட்டை தொகுதியில் 77.24 சதவீதமும், ஆற்காடு தொகுதியில் 79.62 சதவீதமும், சோளிங்கர் தொகுதியில் 80.09 சதவீதமும், அரக்கோணம்(தனி) தொகுதியில் 74.89 சதவீதம் என மொத்தம் 78.09 சதவீதம் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இந்த 4 தொகுதிகளில் பதிவான வாக்குகள், வாலாஜா பகுதியில் உள்ள ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரி வளாகத்தில் எண்ணப்பட உள்ளன. நேற்று வாக்குப்பதிவு முடிந்த உடன் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இருந்து மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரி வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டன.
அங்கு ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனியாக அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த அறைகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. இன்று மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமையில் அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
இந்த அறைகளுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வேட்பாளர்களின் முகவர்கள் அடையாள அட்டையுடன் வந்தால் வாக்கு எண்ணும் மையத்தில் அனுமதிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் அறைகளின் கண்காணிப்பு கேமரா காட்சிகளை அவர்கள் 24 மணி நேரமும் பார்வையிடும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம்:
திருப்பத்தூர் மாவட்டத்தில், திருப்பத்தூர் தொகுதியில் 77 சதவீதமும், ஜோலார்பேட்டை தொகுதியில் 80.92 சதவீதமும், வாணியம்பாடி தொகுதியில் 75 சதவீதமும், ஆம்பூர் தொகுதியில் 76.4 சதவீதம் என மொத்தம் 77.31 சதவீதம் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்த உடன் நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை வாக்குப்பதிவு இயந்திரங்கள் காவல் துறையினர் பாதுகாப்புடன் வாணியம்பாடி ஜெயின் மகளிர் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு வரப்பட்டன.
அங்கு ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனியாக ஒதுக்கப்பட்ட அறைகளில் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்புடன் வைக்கப்பட்டன. மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தலைமையில், தேர்தல் பொது பார்வையாளர்கள் முன்னிலையில் அனைத்து கட்சியினர் மேற்பார்வையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த தொகுதிக்கான அறைகளில் வைக்கப்பட்டு அறைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
இதையடுத்து, வாக்கு எண்ணும் மையத்துக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மத்திய பாதுகாப்பு படையினர், சிறப்பு அதிரடிப்படை மற்றும் உள்ளூர் காவல் துறையினர் என 185 பேர் என சுழற்சி முறையில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மே 2-ம் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அதுவரை ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 5 வாக்கு எண்ணும் மையங்களில் துணை ராணுவத்தினர், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், சட்டம் -ஒழுங்கு காவல் துறையினர், மத்திய எல்லை பாதுகாப்புப்படையினர் தொடர்ந்து கண்காணிப்புப்பணிகளில் ஈடுபட உள்ளனர். வாக்கு எண்ணும் மையங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதால் வெளியாட்கள் வர தடைவிதிக்கப்பட்டுள்ளது. மீறி யாராவது நுழைந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT