Published : 07 Apr 2021 07:49 PM
Last Updated : 07 Apr 2021 07:49 PM
சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் கடந்த தேர்தலைக் காட்டிலும் (76.08 சதவீதம்) இந்தத் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் (73.56 சதவீதம்) வாக்குப்பதிவு சதவீதம் குறைந்துள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை, ஸ்ரீரங்கம், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் (தனி) ஆகிய 9 தொகுதிகள் உள்ளன.
இந்த 9 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்குத் தொடங்கி, இரவு 7 மணிக்கு நிறைவடைந்தது. திருச்சி மாவட்டத்தில் காலை 9 மணியளவில் 10.61 சதவீதம், காலை 11 மணியளவில் 26.44 சதவீதம், பிற்பகல் 1 மணியளவில் 41.83 சதவீதம், பிற்பகல் 3 மணியளவில் 55.25 சதவீதம், மாலை 5 மணியளவில் 66.09 சதவீதம் என்ற அளவில் இருந்தது.
தொடர்ந்து, இரவு 7 மணிக்கு வாக்குப்பதிவு நேரம் நிறைவடைந்தபோது திருச்சி மாவட்டத்தில் 73.56 சதவீதம் வாக்கு பதிவாகியிருந்தது. கடந்த சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் வாக்குப்பதிவு 76.08 சதவீதமாக இருந்த நிலையில், இந்தத் தேர்தலில் குறைந்துள்ளது. குறிப்பாக, திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்துள்ளது.
வாக்குப்பதிவு சதவீதம்:
தொகுதி வாரியாக வாக்குப்பதிவு சதவீதம் (2016 தேர்தல்) மணப்பாறை- 76.02 (78.07), ஸ்ரீரங்கம்- 76.15 (78.95), திருச்சி மேற்கு- 67.01 (69.75), திருச்சி கிழக்கு- 66.87 (68.12), திருவெறும்பூர்- 66.61 (67.83), லால்குடி- 79.23 (81.14), மண்ணச்சநல்லூர்- 79.63 (81.57), முசிறி- 75.98 (79.64), துறையூர் தனி- 76.63 (79.66).
வாக்குப்பதிவு குறைய காரணம் என்ன?
கடந்த சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலைக் காட்டிலும் இந்தத் தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்ததற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. இதுகுறித்து அரசியல் கட்சியினர் கூறும்போது, “கரோனா பரவல் அச்சம் மற்றும் கடுமையான வெயில் ஆகியவையே வாக்குப்பதிவு குறைந்ததற்கு காரணமாக இருக்கலாம். மேலும், உடல் வெப்பநிலை 100 டிகிரி செல்சியஸுக்கு மேல் இருந்தவர்கள் வாக்களிக்க பல்வேறு வாக்குச்சாவடிகளில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இவை மட்டுமன்றி கரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கையாக இந்தத் தேர்தலில் வாக்குச்சாவடிகள் அதிகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நகர்ப் பகுதிகளில் வாக்காளர்கள் பலருக்கும் பூத் சிலிப் சென்று சேரவில்லை. இதனால், அலைக்கழிப்பைத் தவிர்க்கும் நோக்கில் வாக்களிக்க வராமல் இருந்திருக்கலாம்" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT