Last Updated : 07 Apr, 2021 07:10 PM

 

Published : 07 Apr 2021 07:10 PM
Last Updated : 07 Apr 2021 07:10 PM

மதுரையில் கிராமப்புறங்களில் அதிகரித்த வாக்குப்பதிவு சதவீதம்: சோழவந்தான், திருமங்கலம், மேலூரில் அதிகம்

மதுரை மாவட்டத்தில் நகர்ப்பகுதியைவிட, கிராமங்களை உள்ளடக்கிய தொகுதிகளில் வாக்குப்பதிவு சதவீததம் அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் மதுரை கிழக்கு, மேற்கு, தெற்கு வடக்கு, மத்திய, திருப்பரங்குன்றம், திருமங்கலம், உசிலம்பட்டி, சோழவந்தான், மேலூர் ஆகிய 10 தொகுதிகள் உள்ளன. இவற்றில் 26,97,682 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இவர்களுக்காக 3856 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. 5021 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், 3856 கன்ட்ரோல் யூனிட்டும், 3856 விவிபேட் மிஷனும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. மாவட்டம் முழுவதும் 100 சதவீதம் வாக்குப்பதிவை அதிகரிக்க மாவட்ட தேர்தல் ஆணையம் கலை நிகழ்ச்சி, துண்டு பிரசுரங்கள் என, பல்வேறு வகையில் விழிப்புணர்வு பிரச்சாரங்களை செய்திருந்தது.

இந்நிலையில் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்தாலும், மதுரை நகர்ப்பகுதியில் எதிர்பார்த்த அளவுக்கு வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிக்கவில்லை. நகரிலுள்ள 4 தொகுதிகளைவிட, கிராமங்களை உள்ளடக்கிய பிற 6 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்து இருப்பது தெரிகிறது.

இதன்படி, மதுரை வடக்கு தொகுதியிலுள்ள 2,43,424 வாக்காளர்களில் 63.58 சதவீதம் பேரும், தெற்கிலுள்ள 2,30,53 பேரில் 63.78 சதவீதம் பேரும், மதுரை மத்தியிலுள்ள 2,41,796 பேரில் 61.21 சதவீதம் பேரும், மேற்கு தொகுதியிலுள்ள மொத்த வாக்காளர்கள் 3, 6,952 பேரில் 65.15 சதவீதம் பேரும் மட்டுமே வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களித்துள்ளனர்.

புறநகர் பகுதிகளான சோழவந்தான் தொகுதியிலுள்ள 2,18,106 வாக்காளர்களில் 79.47 சதவீதம் பேரும், திருமங்கலத்திலுள்ள 2,77,803 வாக்காளர்களில் 78.11 சதவீதம் பேரும், மேலூர் தொகுதியிலுள்ள 2,44,778 வாக்காளர்களில் 74.23 சதவீதம் பேரும், மதுரை கிழக்கிலுள்ள 3,28,990 பேரில் 71.32 வாக்காளர்களும், மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியிலுள்ள 3,21,195 வாக்காளர்களில் 72.74 சதவீதம் பேரும், உசிலம்பட்டியிலுள்ள 2,84,585 வாக்காளர்களில் 73.71 சதவீதம் பேரும் தேர்தலில் ஓட்டுப்போட்டுள்ளனர்.

10 தொகுதியிலும் வாக்குப்பதிவு சதவீத அடிப்படையில் அதிகபட்சமாக சோழவந்தான் முதலிடத்திலும், திருமங்கலம் 2வது இடத்திலும், மேலூர் மூன்றாவது இடத்திலும் இடம் பெற்றுள்ளன. இதன்மூலம் மதுரை மாவட்டத்தில் நகர்ப்பகுதியிலுள்ள தொகுதிகளைவிட, கிராமப்புறங்களை உள்ளடக்கிய 6 தொகுதிகளில் மக்கள் அதிகமாக, விழிப்புடன் வாக்களித்து இருக்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது.

கரோனா போன்ற சூழலை கருத்தில் கொண்டு இம்முறை வாக்குப்பதிவுக்கு 2 மணி நேரம் கூடுதலாக தேர்தல் ஆணையம் வாய்ப்பளித்தும், மதுரை நகர்ப்பகுதிகளில் வாக்கு சதவீதம் அதிகரிக்கவில்லை. படித்தவர்கள், விவரம் தெரிந்தவர்களாக இருந்தாலும், வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களிக்க விருப்பவில்லையா அல்லது கரோனாவுக்கு பயந்து கூட்டமான இடங்களுக்கு செல்வதற்கு தயங்கியதும் காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x