Published : 07 Apr 2021 06:56 PM
Last Updated : 07 Apr 2021 06:56 PM
சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி மரணம் குறித்த சர்ச்சைப் பேச்சு குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு அனுப்பிய நோட்டீஸுக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார். தனது முழுப் பேச்சிலிருந்து 2 வார்த்தைகளைத் திரித்துப் புகாராக அளித்துள்ளதாகவும், நான் இருவர் மீதும் முழு மரியாதை வைத்துள்ளேன் என்றும் உதயநிதி பதிலளித்துள்ளார்.
தாராபுரத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது பிரச்சாரத்தில் சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி மரணத்துக்கு பிரதமர் மோடியின் அழுத்தம் காரணம் என்று பேசியதாகப் புகார் எழுந்தது.
இதுகுறித்து சர்ச்சை எழுந்த நிலையில், “என் தாய் பாஜகவில் சிறப்பாக நடத்தப்பட்டார். உங்கள் அரசியலுக்காக அவரை இழுக்காதீர்கள்” என சுஷ்மா ஸ்வராஜின் மகள் பன்சூரி ஸ்வராஜ் ட்விட்டரில் உதயநிதிக்கு பதில் அளித்திருந்தார்.
அதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதில் அளித்திருந்த உதயநிதி ஸ்டாலின், “சீனியர்களை ஓரங்கட்டி குறுக்கு வழியில் பொறுப்புக்கு வந்ததாக பிரதமர், தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் என்னை விமர்சித்தார்.
சீனியர்களை ஓரங்கட்டிவிட்டு குறுக்கு வழியில் பிரதமர் ஆனவர் நீங்கள்தான் என்று வேறொரு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அவருக்கு பதிலளித்தேன். மற்றபடி பன்சூரி ஸ்வராஜின் தாயாரையோ, சோனாலி ஜேட்லியின் தந்தையாரையோ விமர்சிக்க வேண்டும் என்ற அவசியமே எனக்கு இல்லை. நன்றி” என பதிலளித்திருந்தார்.
இந்நிலையில் பாஜக சார்பில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தலைமையிலான குழு இந்திய தேர்தல் ஆணையத்தில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராகப் புகார் அளித்தது.
அதில், “பாஜகவின் மறைந்த தலைவர்களான சுஷ்மா ஸ்வராஜ் , அருண் ஜேட்லி ஆகியோர் பிரதமர் மோடி கொடுத்த நெருக்கடியால் இறந்தனர் என திமுகவின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசியது தவறான கருத்து மட்டுமல்ல, மக்களை திசை திருப்ப இதுபோன்ற அவதூறுகளைப் பேசியுள்ளார்.
தேர்தலுக்குச் சற்றும் தொடர்பே இல்லாத அடிப்படையே இல்லாத, பொய்யான கருத்துகளைப் பேசி பிரதமரின் தனிப்பட்ட வாழ்க்கையையும், மறைந்த முன்னாள் அமைச்சர்களையும் விமர்சித்துள்ளார், இது தேர்தல் விதிமுறை மீறல் ஆகும். எனவே அவரைத் தேர்தலில் நிற்காதபடி தகுதி நீக்கம் செய்ய வேண்டும்” எனக் கோரப்பட்டிருந்தது.
இந்தப் புகாரை பரிசீலித்த தேர்தல் ஆணையம் இது தொடர்பாக இன்று (7.4.2021) மாலைக்குள் விளக்கமளிக்க உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ் பிறப்பித்தது. அதில், “தேர்தலுக்கு தொடர்பே இல்லாத தனிப்பட்ட நபர்கள் சம்பந்தப்பட்ட அவதூறு கருத்துகளை தாராபுரத்தில் பிரச்சாரத்தின்போது பேசியுள்ளீர்கள். இதுதேர்தல் விதிமுறை மீறல் ஆகும். எனவே இது தொடர்பாக இன்று (7.4.2021) மாலை 5 மணிக்குள் விளக்கமளிக்க வேண்டும். விளக்கமளிக்கத் தவறும் பட்சத்தில் எந்த முன்னறிவிப்பும் இன்றி தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தேர்தல் ஆணையத்துக்கு உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். அவரது விளக்கத்தில் தேர்தல் ஆணையத்தில் தன் மீது அளிக்கப்பட்ட புகாரை மறுப்பதாகத் தெரிவித்துள்ளார்.
தான் சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ள உதயநிதி, தன் மீதான புகார் குறித்த உரிய முழு தகவலை அளித்தால் மட்டுமே தான் விளக்கம் அளிப்பதற்கான சரியான வாய்ப்பளிக்கப்பட்டதாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளபடி தனிப்பட்ட நபர்களை விமர்சிக்கவோ, அவதூறு கருத்துகளையோ தான் பேசவில்லை என்றும், தனது தமிழ்ப் பேச்சை ஆங்கிலத்தில் திரித்து புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.
“என்னைப் பற்றி பிரதமர் மோடி சீனியர்களை ஓரங்கட்டி குறுக்கு வழியில் பொறுப்புக்கு வந்ததாக தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் விமர்சித்தார். சீனியர்களை ஓரங்கட்டிவிட்டு குறுக்கு வழியில் பிரதமர் ஆனவர் நீங்கள்தான் என்று விமர்சித்து குஜராத் முதல்வரானதிலிருந்து அவர் பிரதமர் ஆகும் வரை ஓரங்கட்டப்பட்ட மூத்த தலைவர்கள் குறித்துப் பேசும்போது அத்வானி, யஷ்வந்த் சின்ஹா, சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிட்டு வேறொரு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அவருக்கு பதிலளித்தேன்.
அதில் நான் பேசிய முழு தமிழ் வார்த்தைகள் வேறு. தங்களிடம் புகாராகக் கொண்டுவரப்பட்டது வேறு. பேச்சின் முழு தமிழ் வார்த்தைகளையும் அளித்தால் சரியாக இருக்கும். நோட்டீஸில் குறிப்பிட்டுள்ள அழுத்தம் என்கிற வார்த்தையை நான் உபயோகப்படுத்திய விதம் வேறு. ஆனால், தவறாக அர்த்தம் கற்பித்துப் புகார் அளித்துள்ளனர். தான் பிரதமர் ஆக மூத்த தலைவர்கள் தலையெடுக்கா வண்ணம் அழுத்தம் கொடுத்தார் என்பதாகவே பேசினேன்.
அதேபோல் தொல்லை என்கிற வார்த்தையும் அதன் சரியான அர்த்தத்தின்படி புகாராக அளிக்கப்படவில்லை. நான் யாரையும் தனிப்பட்ட முறையில் அவர்களது சொந்த வாழ்க்கையை விமர்சிக்கவில்லை. நான் தாராபுரத்தில் என்ன பேசினேன் என்பதை ஏப்.2 அன்று சிங்காநல்லூர் கூட்டத்தில் விரிவாக விளக்கம் அளித்துள்ளேன்.
ஆகவே, என்னுடைய இரண்டு வார்த்தைகளை வைத்து என் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நான், மறைந்த சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். அவர்கள் ஆற்றிய பணியை பெரிதும் மதிக்கிறேன். எனக்கு வாய்ப்பளித்தால் முழு பேச்சின் சாராம்சத்தையும் அளிக்கத் தயாராக உள்ளேன்” என உதயநிதி விளக்கம் அளித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT