Last Updated : 01 Nov, 2015 12:56 PM

 

Published : 01 Nov 2015 12:56 PM
Last Updated : 01 Nov 2015 12:56 PM

நான்குவழிச் சாலை ஓரங்களில் நடுவதற்காக திருச்சி வரகனேரியில் 6 ஏக்கரில் மரக்கன்றுகள் வளர்க்க நெடுஞ்சாலை ஆணையம் திட்டம்

நான்குவழிச் சாலை ஓரங்களில் நடுவதற்குத் தேவையான மரங்கள் கிடைப்பதில் சிரமம் இருப்பதால், தங்களுக்கு தேவையான மரக்கன்றுகளை தாங்களே உற்பத்தி செய்ய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்காக திருச்சி வரகனேரியில் 6 ஏக்கர் பரப்பளவில் நர்சரி உருவாக்கி மரக்கன்றுகளை வளர்க்க நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது.

நாடு முழுவதும் நான்குவழிச் சாலை அமைக்கப்பட்டபோது ஏற்கெனவே அந்தச் சாலை ஓரங்களில் இருந்த லட்சக்கணக்கான மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன. சாலை அமைப்பு பணி முடிந்ததும் வெட்டப்பட்ட ஒவ்வொரு மரத்துக்கும் ஈடாக 10 மரங்கள் வீதம் நடுவதற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவை நிறைவேற்றாததால் நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது தேவையான மரக்கன்றுகள் கிடைப்பதில் சிரமம் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் நீதிபதிகள் உத்தரவின்பேரில், மதுரை மாவட்ட வனத்துறை வளர்த்துவந்த 20 ஆயிரம் மரக்கன்றுகளை ரூ.8 லட்சத்துக்கு வாங்கி மதுரை, திருச்சி, தஞ்சாவூர், கரூர், நாகர்கோவில், காரைக்குடி நான்குவழிச் சாலையில் நட்டனர்.

இந்நிலையில் தங்களுக்குத் தேவையான மரக்கன்றுகளுக்காக வனத்துறை மற்றும் தனியார் நர்சரி களை சார்ந்திருக்காமல், தாங்களே நர்சரி நடத்துவதற்கு நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது. விதைக்காக தோட்டக்கலைத் துறை, பராமரிப்புக்காக வனத்துறையின் உதவியை நாடவும் முடிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குநர் சந்திரசேகர்ரெட்டி ‘தி இந்து’விடம் நேற்று கூறியதாவது: நான்குவழிச் சாலை ஓரங்களில் நடுவதற்காக தற்போது வனத்துறை மற்றும் தனியார்களிடம் மரக்கன்று வாங்கப்படுகிறது. தேவைப் படும்போது போதுமான எண்ணிக்கையில் மரக்கன்றுகள் கிடைப்பதில்லை. மேலும் அந்த மரக்கன்றுகள் ஒரு அடி உயரம் கொண்டாதாக மட்டும் உள்ளது. இதனால் அந்த மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பதில் சிரமம் உள்ளது.

எனவே நெடுஞ்சாலை ஆணையமே தேவையான மரக்கன் றுகளை வளர்க்க திட்டமிட்டுள்ளது. இதற்காக திருச்சி- தஞ்சாவூர் வழித்தடத்தில் வரகனேரியில் 6 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த இடம் நெடுஞ்சாலை ஆணையத்துக்கு சொந்தமானது. இங்கு பல வகையான மரங்கள் வளர்க்கப்படும். இதுதவிர திருச்சி வழித்தடத்தில் மேலும் 2 இடங்களிலும் மரக்கன்றுகள் வளர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு வளர்க்கப்படும் மரக்கன்றுகள் சுமார் 2 அடி உயரம் வளர்ந்ததும் மாநிலம் முழுவதும் நான்கு வழிச்சாலை ஓரங்களில் நடப்படும். மரக்கன்றுகள் நடும் திட்டத்தை இடையில் நிறுத்தாமல் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். விரைவில் மரக்கன்றுகள் வளர்க்கும் திட்டம் வனத்துறை, தோட்டக் கலைத்துறை, என்.ஜி.ஓ.க்களின் உதவியுடன் நிறைவேற்றப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x