Published : 07 Apr 2021 06:01 PM
Last Updated : 07 Apr 2021 06:01 PM
நீலகிரி மாவட்டத்துக்குட்பட்ட உதகை, குன்னூர், கூடலூர் (தனி) சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 3 அடுக்குப் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. 102 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட உள்ளது என ஆட்சியரும் மாவட்டத் தேர்தல் அலுவலருமான ஜெ.இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக நேற்று (ஏப்.6) நடந்தது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர், கூடலூர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவு செய்யப்படும் வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் உதகையில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையமான அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்குக் கொண்டு வரப்பட்டன.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்தல் பார்வையாளர் பனுதர் பஹெரா, மாவட்டத் தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான ஜெ.இன்னசென்ட் திவ்யா, காவல்துறை கண்காணிப்பாளர் ஆர்.பாண்டியராஜன் முன்னிலையில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு, அறை சீல் செய்யப்பட்டது.
வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறையைச் சுற்றிலும் மத்தியத் தொழில் பாதுகாப்புப் படையினரும், அறைகளுக்கு வெளியே தமிழ்நாடு சிறப்புக் காவல்படையும், வெளியில் உள்ளூர் காவல்துறையினர் என மூன்று அடுக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா கூறும்போது, ''மூன்று தொகுதிக்குட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன், அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. 102 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும். மத்திய போலீஸார் மற்றும் மாநில போலீஸார் என மொத்தம் 308 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்'' என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT