Published : 07 Apr 2021 03:57 PM
Last Updated : 07 Apr 2021 03:57 PM
சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குப்பதிவு முடிந்த நிலையில் சிறப்பாகச் செயல்பட்ட கட்சித் தொண்டர்களுக்கும் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்துள்ள ஓபிஎஸ் - ஈபிஎஸ், தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிறைவு பெறும் வரை வாக்குப்பதிவு மையங்களில் தகுந்த விழிப்புணர்வுடன் இருந்து பாதுகாத்திட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் இருவரும் இன்று கூட்டாக வெளியிட்ட அறிக்கை:
“தமிழகத்தில் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் வாழ்வாதாரத்தை முன்னேற்ற வேண்டும் என்ற உன்னதக் குறிக்கோளுடன் எம்ஜிஆர், அதிமுக எனும் மாபெரும் மக்கள் பேரியக்கத்தைத் தொடங்கி பல்வேறு சாதனைகளை நிகழ்த்திக் காட்டினார். அதேபோல் அவரது அரசியல் வாரிசான ஜெயலலிதா தனது உடல் நலனையும் பொருட்படுத்தாமல் மக்கள் நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு தவ வாழ்வு வாழ்ந்து பல்வேறு வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனைகளை நிகழ்த்தினார்.
நம் இருபெரும் தலைவர்களின் ஆசியோடு ஆட்சிப் பொறுப்பேற்ற அதிமுக அரசு மக்கள் நலனை முன்வைத்து பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. அந்த வகையில் அதிமுக அரசு தொடர வேண்டும் என்ற உன்னதக் குறிக்கோளுடன் அராஜகத்திலும், வன்முறையிலும் கைதேர்ந்த திமுகவினரின் பல்வேறு முறைகேடுகளையும், தில்லுமுல்லுகளையும் தாண்டி, ஏப்ரல் 6 அன்று தமிழகத்தில் சுமுகமான வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கி தேர்தல் பணியாற்றிய கட்சி நிர்வாகிகளுக்கும், கட்சி உடன்பிறப்புகளுக்கும், முகவர்களுக்கும் அதேபோல் கூட்டணி மற்றும் தோழமைக் கட்சிகளின் தலைவர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றியைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாக்குப்பதிவு நிறைவு பெற்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டு வந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், வருகின்ற மே 2 அன்று வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கும் வரையிலும், கட்சி வேட்பாளர்களும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களும், கட்சி மற்றும் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளும், முகவர்களும் கவனக்குறைவாக இருந்துவிடாமல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை மிகுந்த எச்சரிக்கையுடனும் விழிப்புணர்வுடனும் இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்”.
இவ்வாறு ஓபிஎஸ்- ஈபிஎஸ் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT