Last Updated : 07 Apr, 2021 04:05 PM

 

Published : 07 Apr 2021 04:05 PM
Last Updated : 07 Apr 2021 04:05 PM

நிலத்துக்கு இழப்பீடு வழங்காததால் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தை ஜப்தி செய்யச் சென்ற நீதிமன்ற ஊழியர்கள்

ஆட்சியர் அலுவலகத்தில் அசையும் சொத்துகளை ஜப்தி செய்ய வந்த நீதிமன்ற ஊழியர்கள். 

விழுப்புரம்

நிலம் வழங்கியதற்கு ரூ.39.36 கோடி இழப்பீடு வழங்காததால், விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தை ஜப்தி செய்ய நீதிமன்ற ஊழியர்கள் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரத்தைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ சண்முகத்திற்குச் சொந்தமான 6 ஏக்கர் 75 சென்ட் இடத்தை 1991-ம் ஆண்டு, அரசு நில ஆர்ஜிதம் செய்து, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்திற்கு வழங்கியது. இதில், சண்முகம் மகன் சிவானந்தத்தின் பங்கான 1 ஏக்கர் 50 சென்ட் இடத்திற்கு, ஒரு சதுர அடி 8 ரூபாய் 10 பைசா எனக் கணக்கிட்டு ரூ.4,55,332 வழங்கப்பட்டது.

நிலம் கையகப்படுத்தியதற்காக வழங்கப்பட்ட இந்தத் தொகை சந்தை மதிப்பைவிட மிகவும் குறைவாக இருப்பதாகக் கூறி, விழுப்புரம் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் சிவானந்தம் 2007-ம் ஆண்டு வழக்குத் தொடர்ந்தார். மேலும், சண்முகத்தின் பாகமான 1 ஏக்கர் 50 சென்ட் இடத்திற்கும் இழப்பீடு கேட்டு 2013-ம் ஆண்டு வழக்குத் தொடர்ந்தார்.

அதன்படி, வழக்கை விசாரித்த நீதிபதி கோபிநாதன் இரு வழக்குகளுக்கும் 2018-ம் ஆண்டு இழப்பீட்டுத் தொகையாக ரூ.39,36,59,337 வழங்க வேண்டுமென உத்தரவிட்டார்.

இழப்பீட்டுத் தொகையை வழங்காமல் காலதாமதப்படுத்தியதால் சிவானந்தம் மீண்டும் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

அந்த மனுவை விசாரித்த நீதிபதி, இழப்பீட்டுத் தொகையை மூன்று மாதத்திற்குள் நீதிமன்றத்தில் டெபாசிட் செய்யவேண்டும். இல்லையென்றால் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அனைத்து அசையும் சொத்துகள், வீட்டுவசதி வாரியத்தில் உள்ள அசையும் சொத்துகளைப் பறிமுதல் செய்யப்படும் என்று 2020-ல் உத்தரவிட்டிருந்தார்.

போதிய கால அவகாசம் கொடுத்தும், வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் இழப்பீட்டுத் தொகையை வழங்காததால், இன்று நீதிமன்ற ஊழியர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பொருட்களை ஜப்தி செய்ய வந்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மோகன், நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் சிவானந்தத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், வீட்டுவசதி வாரிய அதிகாரிகளை வரவழைத்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது, இழப்பீட்டுத் தொகை வழங்க அவகாசம் கேட்கப்பட்டது. இதற்கு மனுதாரரும் ஒப்புக்கொண்ட நிலையில், ஜப்தி நடவடிக்கை கைவிடப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x