Published : 07 Apr 2021 02:03 PM
Last Updated : 07 Apr 2021 02:03 PM
தேர்தல் வாக்குப்பதிவு அமைதியாக முடிந்த நிலையில், தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக பதிவான வாக்குகள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. இதில் விவிஐபிக்கள், விஐபிக்கள் தொகுதி வாக்குப்பதிவு நிலவரம் குறித்து தகவல் வெளியானது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. அதன் பின்னர் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. வாக்குப்பதிவு நாளான 6-ம் தேதி வரை பரபரப்பாகத் தேர்தல் நிகழ்வுகள் இருந்தன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் இம்முறை 4 அணிகள் கூட்டணிகளாகவும், நாம் தமிழர் கட்சி தனியாகவும் போட்டியிட்டது. இம்முறை ஓய்வுபெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், சினிமா நட்சத்திரங்கள் எனத் தொகுதியில் வேட்பாளர்களுக்கு இடையேயான போட்டி களை கட்டியது.
இதில் திமுக தலைவர் ஸ்டாலின், திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி, செந்தில் பாலாஜி, பாஜக தரப்பில் குஷ்பு, அண்ணாமலை, எச்.ராஜா, வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் அதிமுக சார்பில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர், மநீம சார்பில் கமல்ஹாசன், ஸ்ரீபிரியா, பழ.கருப்பையா, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தேமுதிக பொருளாளர் பிரேமலதா உள்ளிட்டோர் போட்டியிடும் தொகுதிகள் பெரிதாக எதிர்பார்க்கப்படுகின்றன.
* சென்னையில் கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிட்டார். இவரை எதிர்த்து அதிமுக சார்பில் ஆதிராஜாராம் போட்டியிட்டார். சென்னையில் மந்தமான வாக்குப்பதிவு கொளத்தூரையும் பாதித்துள்ளது. கொளத்தூரில் பதிவான மொத்த வாக்குப்பதிவு 60.52%.
* சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்டார். இங்கு எதிர் வேட்பாளராக பாமகவின் கஸ்ஸாலி போட்டியிட்டார். இங்கு பதிவான வாக்குகள் 58.41%.
* அடுத்து கவனம் பெற்ற தொகுதி ஆயிரம் விளக்கு. இங்கு பாஜக சார்பில் குஷ்பு போட்டியிட்டார். திமுக சார்பில் எழிலன் போட்டியிட்டார். கடுமையான போட்டி என்று கூறப்பட்ட நிலையில் இங்கு பதிவான வாக்குகள் 58.40%.
* தி.நகர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் பழ.கருப்பையாவும், அதிமுக சார்பில் சத்யாவும், திமுக சார்பில் கருணாநிதியும் போட்டியிட்டனர். இங்கு பதிவான வாக்குகள் 55.92%.
* மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டார். இதே தொகுதியில் பாஜகவின் வானதி சீனிவாசன், காங்கிரஸ் சார்பில் மயூரா ஜெயக்குமார் போட்டியிட்டனர். இந்தத் தொகுதியில் வாக்குப்பதிவு மந்தமாகவே இருந்தது. இங்கு பதிவான வாக்குகள் 60.72%.
*அதேபோல் அரவக்குறிச்சியில் பாஜக வேட்பாளரும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான அண்ணாமலை போட்டியிட்டார். இங்கு திமுக சார்பில் இளங்கோ என்பவர் போட்டியிட்டார். இங்கு ஆரம்பம் முதல் பரபரப்பாகவே தேர்தல் களம் இருந்தது. இங்கு பதிவான வாக்குகள் 81.90%.
* அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமியின் தொகுதி எடப்பாடி. இங்கு சம்பத் என்பவர் திமுக சார்பில் நிறுத்தப்பட்டுள்ளார். பழனிசாமி வெல்லக்கூடாது என முனைப்பு காட்டிவரும் நிலையில், தனது தொகுதியில் கடந்த 2 தேர்தலில் தொடர் வெற்றி பெற்றுவரும் பழனிசாமி மூன்றாவது முறையாக வெல்ல முயற்சி எடுத்து வருகிறார். இங்கு பதிவான வாக்குகள் 85.60%.
* இதேபோன்று மிக முக்கியமாக கவனிக்கப்படும் தொகுதி, சர்ச்சைக்குள்ளான தொகுதி திமுக சார்பில் செந்தில்பாலாஜி போட்டியிட்ட கரூர் தொகுதியாகும். இங்கு அவரை எதிர்த்து நின்றவர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆவார். இங்கு பதிவான வாக்குகள் 83.50%.
* நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து திமுக சார்பில் சங்கர் போட்டியிட்டார். இங்கு பதிவான வாக்குகள் 65%.
* மயிலாப்பூரில் மக்கள் நீதி மய்யம் சார்பில் ஸ்ரீபிரியாவும், அதிமுக சார்பில் நட்ராஜும், திமுக சார்பில் த.வேலுவும் போட்டியிட்டனர். இங்கு பதிவான வாக்குகள் 56.59%.
* துணை முதல்வர் ஓபிஎஸ் போடி தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்டவர் திமுகவின் தங்க தமிழ்ச்செல்வன். இங்கு போட்டி கடுமையாக உள்ள நிலையில் பதிவான வாக்குகள் 73.65%.
*அடுத்து அதிகம் கவனிக்கப்படும் தொகுதி தொண்டாமுத்தூர் தொகுதி ஆகும். இங்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும், திமுக சார்பில் கார்த்திகேய சிவசேனாபதியும் போட்டியிட்டனர். வாக்குப்பதிவின்போது திமுக வேட்பாளரைத் தாக்க முயற்சி என ஆரம்பம் முதலே டென்ஷனான இத்தொகுதியின் வாக்குப்பதிவு 71.04%.
* அடுத்து முக்கியமானதாக கவனிக்கப்படும் தொகுதி அமமுக வேட்பாளர் டிடிவி தினகரன் போட்டியிடும் கோவில்பட்டி தொகுதி ஆகும். இங்கு அமைச்சர் கடம்பூர் ராஜு அதிமுக சார்பிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் சீனிவாசனும் போட்டியிட்டனர். மும்முனைப்போட்டியில் இங்கு பதிவான வாக்குகள் 67.43% ஆகும்.
* அடுத்த முக்கியமான தொகுதி அமைச்சர் சி.விஜயபாஸ்கர் போட்டியிடும் விராலிமலை தொகுதி. இங்கு திமுக சார்பில் தொடர்ந்து இருமுறை தோற்ற நிலையில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்றே ஆகவேண்டும் என திமுக வேட்பாளர் தென்னலூர் பழனியப்பன் போட்டியிட்டார். இங்கு இரண்டு வேட்பாளர்கள் வாக்காளர்களிடம் கண்ணைக் கசக்கி வாக்குக் கேட்பது வைரலான நிலையில் மக்கள் இங்கு அதிக அளவில் வாக்குகளைப் பதிவிட்டுள்ளனர். பதிவான வாக்குகள் 85.43% ஆகும்.
*அடுத்து முக்கியமாக கவனிக்கப்படும் தொகுதிகளில் ஒன்று காரைக்குடி. இங்கு காங்கிரஸ் வலுவாக உள்ள நிலையில் வேட்பாளர் நியமனம் பிரச்சினை வந்தது. இங்கு பாஜக சார்பில் எச்.ராஜா போட்டியிட்டார். அமமுக சார்பில் தேர்போகி பாண்டி வலுவான போட்டியை அளிப்பதால் இத்தொகுதியும் கவனம் பெறுகிறது. இங்கு பதிவான வாக்குகள் 66.22%.
* அடுத்து பாஜக சார்பில் நெல்லையில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் தொகுதி பரபரப்பாகப் பார்க்கப்படுகிறது. இங்கு திமுக சார்பில் லட்சுமணன் என்பவர் போட்டியிட்டார். இந்த மாவட்டம் முழுவதும் வாக்குப்பதிவில் பின்தங்கிய நிலையில் நெல்லை தொகுதியில் பதிவான வாக்குகள் 66.90%.
* அடுத்து பெரிதும் கவனிக்கப்படும் தொகுதி விருத்தாச்சலம். இங்கு விஜயகாந்த் தனித்து போட்டியிட்டு வென்றுள்ளார். அவர் தற்போது போட்டியிடாத நிலையில் அமமுக கூட்டணி சார்பில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா போட்டியிட்டார். இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் ராதாகிருஷ்ணன் என்பவர் போட்டியிட்டார். பாமக சார்பில் கார்த்திகேயன் என்பவர் போட்டியிட்டார். இங்கு பதிவான வாக்குகள் 76.98%.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT