Published : 07 Apr 2021 01:51 PM
Last Updated : 07 Apr 2021 01:51 PM
தமிழ்நாடு சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 4 வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள பாதுகாப்பு அறைகளில் இன்று வைக்கப்பட்டு, அந்த அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டன.
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை, ஸ்ரீரங்கம், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் (தனி) ஆகிய 9 தொகுதிகள் உள்ளன. இந்த 9 தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலில் 23,38,745 பேர் இடம் பெற்றனர். இவர்கள் வாக்களிப்பதற்காக மாவட்டம் முழுவதும் 1,147 வாக்குப்பதிவு மையங்களில் 3,292 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் 5,688 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 3,950 மின்னணு கட்டுப்பாட்டு இயந்திரங்கள், வாக்களித்ததை உறுதி செய்யும் 4,247 இயந்திரங்கள் வாக்குப்பதிவுக்குப் பயன்படுத்தப்பட்டன. இதில் 73.55 சதவீத வாக்குகள் பதிவாகின. அதாவது, வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்த ஆண்கள் 11,35,740 பேரில் 8,42,240 பேரும், பெண்கள் 12,02,728 பேரில் 8,77,897 பேரும், இதரர் 237 பேரில் 58 பேரும் என மொத்தம் 17,20,195 பேர் வாக்களித்திருந்தனர்.
தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்காகத் திருச்சி மாவட்டத்தில் திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு ஆகிய தொகுதிகளுக்கு ஜமால் முகம்மது கல்லூரியிலும், லால்குடி, மண்ணச்சநல்லூர் ஆகிய தொகுதிகளுக்கு சமயபுரம் கே.ராமகிருஷ்ணன் பொறியியல் கல்லூரியிலும், முசிறி, துறையூர் ஆகிய தொகுதிகளுக்கு கண்ணனூர் இமயம் பொறியியல் கல்லூரியிலும், மணப்பாறை, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர் ஆகிய தொகுதிகளுக்கு திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரியிலும் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், வாக்குப்பதிவு நேற்று இரவு 7 மணிக்கு முடிவடைந்தவுடன், வாக்குப்பதிவுக்குப் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், மின்னணு கட்டுப்பாட்டு இயந்திரங்கள், வாக்களித்ததை உறுதி செய்யும் இயந்திரங்கள் ஆகியவை வேட்பாளர்களின் வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு, அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.
தொடர்ந்து, இன்று காலை 11 மணி அளவில் அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்டவை வைக்கப்பட்டுள்ள அறைகள் பூட்டப்பட்டு, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் ஆகியோர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.
திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் எஸ்.திவ்யதர்ஷினி முன்னிலையில் அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு வெளியே முழு நேரத் துப்பாக்கி ஏந்திய காவல் போடப்பட்டுள்ளதுடன், கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையை மாவட்ட ஆட்சியர் எஸ்.திவ்யதர்ஷினி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சுப.கமலக்கண்ணன் (திருச்சி கிழக்கு), என்.விஸ்வநாதன் (திருச்சி மேற்கு) உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT