Published : 07 Apr 2021 10:57 AM
Last Updated : 07 Apr 2021 10:57 AM
சமூகநீதியை வென்றெடுக்க அகில இந்திய அளவில் பிற்படுத்தப்பட்டோரை ஒருங்கிணைத்தவர் மார்க்சிய, பெரியாரிய அறிஞர் வே.ஆனைமுத்து என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, திருமாவளவன் இன்று (ஏப். 07) வெளியிட்ட இரங்கல் செய்தி:
"சமூக நீதி என்னும் சுடரின் ஒளியை இந்தியா முழுவதும் பரவச் செய்தவர்; பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு கிடைப்பதற்கான அடித்தளத்தை அமைத்தவர்; தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டின் அளவு 50% ஆக உயர்த்தப்பட்டதில் பெரும் பங்கு வகித்தவர் ஆனைமுத்து.
சமூக நீதிக் கொள்கை பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ள சூழலில், அவரது மறைவு தமிழர்களுக்கு மிகப்பெரும் இழப்பு. அவருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம்.
மாணவப் பருவத்திலேயே பெரியாரின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டவர். கல்லூரிப் படிப்பு முடிந்ததும் அவரோடு இணைந்து அரசியல் பணிகளை முன்னெடுத்தவர். சட்ட எரிப்புப் போராட்டத்துக்கான அறைகூவலை ஏற்று அதில் கலந்து கொண்டு 18 மாதங்கள் சிறைப்படுத்தப்பட்டவர். பெரியாரின் தொண்டராக மட்டுமின்றித் தோழராக இருந்து அவரது சிந்தனைகள் தமிழர்களுக்கு எட்டும் வண்ணம் பெரியாரின் பேச்சுகளையும் எழுத்துகளையும் மூன்று தொகுதிகளாக தொகுத்து வெளியிட்டவர்.
இந்திய அளவில் பயணம் மேற்கொண்டு சமூக நீதி என்பது இட ஒதுக்கீடு என்னும் உரிமைப் பகிர்வு மட்டுமல்ல; அது சனாதன எதிர்ப்பு என்னும் கொள்கையோடு தொடர்பு கொண்டது என்பதை எடுத்துக்கூறி சனாதானத்தின் உறைவிடமாக இருக்கும் உத்தரப்பிரதேசத்தில் பெரியாரின் கருத்துகள் பரவ வகை செய்தவர். மண்டல் குழு பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட அவர் மேற்கொண்ட பயணங்களும் மிக முக்கிய காரணிகளாக அமைந்தன.
தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டின் அளவை 50% ஆக உயர்த்தியதில் அவருடைய பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.
பெரியாரின் கருத்துகளைப் பரப்பும் செயற்பாட்டாளராக மட்டுமின்றி அவரது சிந்தனைகளை வளர்த்தெடுத்த கருத்தியல் தளபதியாகவும் அவர் திகழ்ந்தார். சிந்தனையாளர் கழகம், மார்க்சியப் பெரியாரிய பொதுவுடமைக் கட்சி என்ற அமைப்புகளை உருவாக்கினார்.
பெரியார் பயணம் செய்த நாடுகளுக்கெல்லாம் பயணம் செய்து அவரைப் பற்றிய செய்திகளையெல்லாம் தொகுத்து நூல்களாக வெளியிட்டார். தமிழில் மட்டுமின்றி ஆங்கிலத்திலும் ஏடு ஒன்றை நடத்தினார். அதன்மூலம் பெரியாரின் சிந்தனைகளை சமகாலச் சூழலோடு பொருத்தி அரசியல் சமூக விமர்சனங்களை முன்வைத்தார்.
பெரியாரின் சிந்தனைகள் மார்க்சியத்தோடும் அம்பேத்கரியத்தோடும் இணைக்கப்பட வேண்டியதன் தேவையை உணர்ந்து அவற்றை இளைஞர்களிடையே பரப்பினார்.
பெரியார் நெறி பிறழாத அவரது வாழ்க்கை 96 வயதிலும் அவரை ஒரு இளைஞரைப் போல இயங்க வைத்தது. எவருக்கும் அஞ்சாமல் தனது கருத்துக்களைக்கூறும் துணிச்சல் பெற்றவர். சனாதன சக்திகள் தமிழ்நாட்டை மீண்டும் சூறையாட முனைந்துள்ள சூழலில் ஆனைமுத்து-வின் பணி அதிகம் தேவைப்படுகிற நேரத்தில் இயற்கை அவரைக் கவர்ந்துகொண்டுவிட்டது. அவருடைய இறப்பு தமிழ்ச் சமூகத்துக்குப் பேரிழப்பாகும்.
ஆனைமுத்து-வுக்கு எமது வீர வணக்கங்களைச் செலுத்துகிறோம். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் அவரது கட்சியினருக்கும் எமது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்".
இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT