Published : 03 Mar 2014 12:00 AM
Last Updated : 03 Mar 2014 12:00 AM
நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தை முதல்வர் ஜெயலலிதா இன்று காஞ்சிபுரத்தில் தொடங்குகிறார். ஏப்ரல் 5-ம் தேதி வரை தமிழகத்தின் பல தொகுதிகளிலும் அவர் பிரச்சாரம் செய்கிறார்.
நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடக்கவுள்ளது. முதல்வர் ஜெயலலிதா கடந்த 24-ம் தேதி தனது பிறந்தநாளன்று தமிழகம், புதுச்சேரியின் 40 தொகுதிகளுக்கும் அதிமுக வேட்பாளர்களை அறிவித்தார். தேசியப் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாரிக்கப்பட்ட அதிமுக தேர்தல் அறிக்கையையும் அடுத்த நாளே வெளியிட்டார்.
இந்நிலையில், தனது முதல்கட்ட தேர்தல் பிரச்சாரத்தை முதல்வர் ஜெயலலிதா காஞ்சிபுரத்தில் இன்று தொடங்குகிறார்.
காஞ்சிபுரம் தேரடியில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து ஹெலிகாப்டரில் காஞ்சிபுரம் செல்லும் முதல்வர் ஜெயலலிதா, நத்தப்பட்டையில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் இறங்கி அங்கிருந்து காரில் பொதுக்கூட்ட மேடைக்கு செல்கிறார்.
அங்கு மாலை 4 மணிக்கு நடக்கும் பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் அதிமுக வேட்பாளர் மரகதம் குமாரவேலுக்கு ஆதரவு கேட்டுப் பேசுகிறார். கூட்டம் முடிந்ததும், சென்னைக்கு ஹெலிகாப்டரில் திரும்புகிறார்.
மீனம்பாக்கத்தில் நாளை..
அதைத் தொடர்ந்து, மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா பேசுகிறார். தமிழகம் முழுவதும் நடைபெறவுள்ள அனைத்து பிரச்சாரப் பொதுக்கூட்டங்களுக்கும் முதல்வர் ஜெயலலிதா சென்னையில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டுச் செல்வார். ஒவ்வொரு முறையும் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு ஹெலிகாப்டரில் சென்னை திரும்பிவிடுவார் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
முதல்கட்ட பிரச்சாரத்தை ஜெயலலிதா சங்கரன்கோவிலில் ஏப்ரல் 5-ம் தேதி நிறைவுசெய்கிறார்.
கம்யூனிஸ்ட்களுடன் மார்ச் 6-க்குள் பங்கீடு?
தேர்தல் பிரச்சாரத்தை முதல்வர் ஜெயலலிதா தொடங்கிவிட்டாலும், கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் இன்னும் தொகுதிப் பங்கீடு முடியவில்லை. இதனால், கம்யூனிஸ்ட் கட்சியினர் மட்டுமின்றி அதிமுக வேட்பாளர்களும் ஒருவித தவிப்புடன் உள்ளனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு அதிக வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதி நாகப்பட்டினம். அவர்கள் குறிவைக்கும் தொகுதிகளிலும் முக்கியமானது. அங்கு ஜெயலலிதா வரும் 6-ம் தேதி பிரச்சாரம் செய்கிறார். எனவே, அதற்கு முன்பாக தொகுதிப் பங்கீடு முடியும் என்ற நம்பிக்கையில் கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT