Published : 03 Nov 2015 10:59 AM
Last Updated : 03 Nov 2015 10:59 AM
கரூரில் உற்பத்தியாகும் மெல்லிய மெத்தைகளின் (க்வில்ட்) விற்பனை குளிர் காலத்தில் 2 மடங்காக அதிகரித்துள்ளது.
தமிழகத்தின் கைத்தறி நகரமாக அறியப்பட்ட கரூர், அதன்பின் வீட்டு உபயோக ஜவுளி ஏற்று மதிக்கு பெயர் பெற்றதாக மாறியது. திரைச்சீலை, கையுறை, ஏப்ரான் உள்ளிட்ட பல்வேறு வீட்டு உபயோக ஜவுளி ரகங்கள் கரூரில் உற்பத்தி செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.3,000 கோடி வரை அந்நிய செலாவணி ஈட்டப்படுகிறது.
வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய் யப்படும் ஜவுளி ரகங்களில் ஏற்றுமதிக்குப் போக உபரியானவை மற்றும் சிறுசிறு குறைபாடு உள்ள ஜவுளிகள் உள்நாட்டு சந்தையில் விற்பனை செய்யப்படும்.
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சில ஏற்றுமதி ஜவுளி ரகங்களை உள்நாட்டு சந்தை விற் பனைக்கென்றே சில நிறுவனங் கள் கரூரில் உற்பத்தி செய்கின்றன. அப்படி ஒரு ரகம்தான் போர்த்திக்கொள்ள பயன்படுத்தப்படும் க்வில்ட் எனப்படும் மெல்லிய மெத்தை. பஞ்சு, ஃபோம் (நுரைப் பஞ்சு), ரெக்ரான் எனப்படும் பிளாஸ்டிக் நூலிழைகளைக் கொண்ட ஷீட்களைச் சுற்றி விதவிதமான பருத்தி துணிகளில் பல்வேறு வடிவங்களிலும், வெல்வெட் துணிகளில் பல்வேறு டிசைன்களிலும் உற்பத்தி செய்யப்படும் இந்த மெல்லிய மெத்தையை குளிர் காலத்தில் போர்த்திக்கொண்டால் உடல் சூடு குறையாமல் கதகதப்பாக இருக்கும்.
குளிர்சாதன அறைகளில் தூங்கு பவர்கள் போர்த்திக் கொள்வதற் காக உற்பத்தி செய்யப்பட்ட இந்த மெல்லிய மெத்தைகளை காலப்போக்கில் குளிர்காலங்களில் சாதாரண அறைகளைப் பயன் படுத்துபவர்களும் உபயோகிக்கத் தொடங்கினர். இதனால் உள்நாட்டு சந்தையிலும் மெல்லிய மெத் தைக்கு வரவேற்பு கிடைத்தது. உள்நாட்டு விற்பனைக்கு தயாரிக்கப்படும் மெல்லிய மெத்தைகள் பெரும்பாலும் ரெக்ரான் எனப்படும் பிளாஸ்டிக் நூலிழை ஷீட்டை கொண்டே தயாரிக்கப்படுகின்றன.
ஒருவர், இருவர், குடும்பத்தினர் அனைவரும் போர்த்திக் கொள்ளும் அளவுகளில் என மெல்லிய மெத்தைகள் உற்பத்தி செய்யப்படு கின்றன. வெயில் காலங்களைவிட மழை மற்றும் குளிர்காலங்களில் மெல்லிய மெத்தைக்கான தேவை அதிகரித்துவிடும்.
தற்போது மழைக் காலம் தொடங்கியுள்ளதால் கரூரில் உற்பத்தியாகும் மெல்லிய மெத் தைகளின் விற்பனை கணிசமாக அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இது குளிர்காலம் முடியும் ஜனவரி மாதம்வரை நீடிக்கும்.
இதுகுறித்து கரூர் வீட்டு உபயோக பருத்தி துணி ரகங்கள் விற்பனையாளர் வி.எஸ்.துரைமுருகன் கூறியபோது, “ஏற்றுமதி ரகமாக உற்பத்தி செய்யப்பட்ட, ஏற்றுமதியில் உபரியான மெல்லிய மெத்தைகள் உள்நாட்டு சந்தையில் விற்பனைக்கு வந்தன. தற்போது ஏற்றுமதியில் உபரியானவற்றுடன் உள்நாட்டு விற்பனைக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்படும் மெல் லிய மெத்தைகளும் உள்நாட்டுச் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
போர்த்திக்கொள்ளும் பயன்பாட்டுக்காக தயாரிக்கப்படும் மெல்லிய மெத்தைகளை உள்நாட்டில் படுக்கை விரிப்பாகவும் பயன்படுத்துகின்றனர். ரூ.550 தொடங்கி ரூ.2,000 வரை உள்நாட்டு சந்தையில் இது விற்பனை செய்யப்படுகிறது.
மழை மற்றும் குளிர்காலமான அக்டோபர் முதல் ஜனவரி மாதம்வரை வழக்கமான விற் பனையைவிட 2 மடங்கு விற்பனை அதிகரிக்கும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT