Published : 07 Apr 2021 03:17 AM
Last Updated : 07 Apr 2021 03:17 AM
திருச்சி மாவட்டத்தில் தாங்கள் போட்டியிடும் தொகுதியில் ஓட்டு இல்லாததால், தனது வாக்கை தனக்காக செலுத்த முடியாமல் அதிமுக, திமுக, அமமுக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பாளர்கள் தவிப்புக்குளாகினர்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதி திமுக வேட்பாளராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி போட்டியிடுகிறார்.
இவர் கடந்த சில ஆண்டுகளாக இத்தொகுதிக்குட்பட்ட விஸ்வாஸ் நகரில் குடியிருந்தபோதும், தனது மற்றும் குடும்பத்தினரின் ஓட்டுக்கள் நிரந்தர முகவரியான மேற்கு தொகுதிக்குட்பட்ட கிராப்பட்டியில் உள்ளது.
தற்போது திருவெறும்பூர் தொகுதியில் அதிமுக வேட்பாளருடன் கடுமையான போட்டி நிலவிவரும் சூழலிலும், அன்பில் மகேஷ் பொய்யாமொழியால் தனது வாக்கை, தனக்காக அளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. குடும்பத்தினருடன் கிராப்பட்டி லிட்டில் பிளவர் பள்ளிக்குச் சென்று வாக்களித்தார்.
சென்னையில் வாக்குரிமை
இதேபோல திருச்சி கிழக்கு தொகுதி திமுக வேட்பாளரான கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இனிகோ இருதயராஜூக்கு சென்னையில் வாக்கு உள்ளது.
இதனால், அவரால் தன்னுடைய வாக்கை தனக்கே செலுத்திக் கொள்ள முடியாமல் போனதுடன், இங்கு வாக்குப்பதிவு நிலவரத்தைக் கவனிக்க வேண்டும் என்பதால் இவர் நேற்று வாக்களிப்பதற்காக சென்னைக்கும் செல்லவில்லை.
இதேபோல மணப்பாறை தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் அப்துல்சமது, சென்னையைச் சேர்ந்தவர். எனவே அவரால் தனக்கு வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
அதிமுக, தமாகா வேட்பாளர்கள்
மண்ணச்சநல்லூர் தொகுதி அதிமுக வேட்பாளரான மு.பரஞ்சோதியின் சொந்த ஊர் ஜீயபுரம் அருகேயுள்ள எட்டரை கிராமம். எனவே அவர் நேற்று ரங்கம் தொகுதியிலுள்ள எட்டரை அரசு மேல்நிலைப்பள்ளிக்குச் சென்று தனது வாக்கை செலுத்தினார்.
லால்குடி தொகுதியில் அதிமுக கூட்டணியான தமாகா சார்பில் போட்டியிடும் தர்மராஜ் தில்லைநகரில் வசித்து வருகிறார். எனவே அவர் நேற்று மேற்கு தொகுதிக்குட்பட்ட தில்லைநகர் பள்ளியில் வாக்களித்தார்.
அமமுக- நாம் தமிழர்
இதேபோல, திருச்சி கன்டோன்மென்ட் பகுதியில் வசிக்கும் ரங்கம் தொகுதியின் அமமுக வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் திருச்சி மேற்கு தொகுதியிலும், திருவானைக்காவல் பர்மா காலனியில் வசித்து வரும் திருச்சி கிழக்கு தொகுதி அமமுக வேட்பாளர் மனோகரன் ரங்கம் தொகுதியிலும், முத்தரசநல்லூரைச் சேர்ந்த திருச்சி மேற்கு தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வினோத் ரங்கம் தொகுதியிலும் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.
இவர்களில் பலர் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகுதான், தொகுதிகளின் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
தாங்கள் நினைத்திருந்த தொகுதி கிடைக்காமல், வேறு தொகுதியில் வாய்ப்பு அளிக்கப்பட்டதால் கடைசியில் தங்களது வாக்கை, தங்களுக்கு செலுத்திக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT