Published : 07 Apr 2021 03:18 AM
Last Updated : 07 Apr 2021 03:18 AM

சர்க்கார் திரைப்பட பாணியில் வேலூரில் கள்ள ஓட்டால் ஆய்வுக்குரிய வாக்கை பதிவு செய்த வங்கி ஊழியர்

வேலூர் ஹோலிகிராஸ் பள்ளியில் லோகேஷ் நிவாஸன் என்பவருடைய வாக்கை வேரு ஒருவர் கள்ள ஓட்டு போட்டதால் ஆய்வுக்குரிய வாக்குசீட்டை பதிவு செய்து வாக்குசாவடி தலைமை அலுவலர் சுப்புரத்தினத்திடம் வழங்கினார்.

வேலூர்

வேலூரில் கள்ள ஓட்டால் வாக்குப்பதிவு இழந்த வங்கி ஊழியர் சர்க்கார் திரைப்பட பாணியில் 49P என்ற ஆய்வுக் குரிய வாக்கை பதிவு செய்தார்.

சர்க்கார் திரைப்படத்தில் கள்ள ஓட்டால் வாக்குப்பதிவை இழக்கும் நடிகர் விஜய், மாற்றாக 49P என்ற அடிப் படையில் வாக்குப்பதிவு செய்யும் நடைமுறை குறித்தும் விரிவாக விளக்கப்பட்டிருக்கும். இதனால், கள்ள ஓட்டு மூலம் வாக்குரிமையை இழந்த நபர் இந்த 49P என்ற முறையில் வாக்களிக்க முடியும் என்ற விழிப் புணர்வு பொதுமக்கள் மத்தியில் பரவலாக ஏற்படுத்தப்பட்டது.

நடிகர் விஜய் நடித்த சர்க்கார் பட பாணியில் வேலூரில் வங்கி அதிகாரி லோகேஷ் நிவாஸன் என்பவர் நேற்று 49P என்ற முறையில் தனது வாக்கை பதிவு செய்துள்ளார்.

இது தொடர்பான விவரம்

வேலூர் சத்துவாச்சாரி அன்னை தெரசா நகர் 2-வது குறுக்கு தெருவைச் சேர்ந் தவர் லோகேஷ் நிவாஸன். இவர், பொதுத்துறை வங்கியில்ஊழியராக பணியாற்றி வருகிறார். வேலூர் சத்துவாச்சாரி ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்ய லோகேஷ் நிவாஸன் நேற்று பிற்பகல் சென்றார். ஆனால், அவரது வாக்கை ஏற்கெனவே யாரோ ஒரு நபர் கள்ளத்தனமாக பதிவு செய்துவிட்டது தெரியவந்தது.

இதனால், அதிர்ச்சியடைந்த லோகேஷ் நிவாஸன் தனக்கு வாக்குரிமை கண்டிப்பாக அளிக்க வேண்டும் என அங்கிருந்த வாக்குச்சாவடி அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தார். இது தொடர்பாக அந்த வாக்குச் சாவ டியில் இருந்த அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் மத்தியில் வாக்குவாதமும் சலசலப்பும் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு 49P என்ற அடிப்படையில் வாக்கு அளிக்க வாக்குச்சாவடி தலைமை அலுவலர் சுப்புரத்தினம் அனுமதி வழங்கினார். அதன்படி, ஆய்வுக்குரிய வாக்குச்சீட்டு என்ற அடிப்படையில் வாக்குச்சீட்டு மூலம் தனது வாக்குரிமையை லோகேஷ் நிவாஸன் பதிவு செய்தார்.

49P வாக்கு கணக்கெடுப்பு

49P முறையில் பதிவு செய்யப்பட்ட வாக்கின் பயன் மற்றும் அதை எவ்வாறு கணக்கில் கொள்வார்கள் என்பது குறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகளிடம் விசாரித்தபோது, ‘‘49P வாக்குச்சீட்டு இருக்கும் உறை தனியாக வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாக்கப்படும். வாக்கு எண்ணும் நாளில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். அதன் பிறகு மின்னணு வாக்குப்பதிவுகள் எண்ணப்படும்.

இதில், அதிக வாக்குகள் பெறும் முதல் இரண்டு பேருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் சமமாக இருந்தால் மட்டும் இந்த 49P வாக்குச்சீட்டு உறை பிரிக்கப்பட்டு அவர் யாருக்கு வாக்களித்தார் என்பதை பார்த்து அந்த வேட்பாளரின் கணக்கில் சேர்க்கப்படும்.

அதிக வாக்குகள் பெறும் முதல் இரண்டு வேட்பாளர்களின் இடையிலான வாக்குகள் வித்தியாசம் அதிகமாக இருந்தால் இந்த 49P உறை கடைசிவரை பிரிக்கப்படாது. 49P என்பது வாக்குரிமையை இழந்த நபரை திருப்திபடுத்த மட்டுமே’’ என தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x