Published : 07 Apr 2021 01:36 AM
Last Updated : 07 Apr 2021 01:36 AM

வாக்குப்பதிவு மையங்களை விழிப்புடன் கண்காணியுங்கள்: திமுக, கூட்டணியினருக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை

தேர்தல் பணி தொடரவே செய்கிறது, வாக்குப் பதிவிற்கும், வாக்கு எண்ணிக்கைக்கும் இடைப்பட்ட காலத்தில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் மையங்களை விழிப்புடன் கட்சி மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தோழர்கள் கண்காணித்திட வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் இதுகுறித்து விடுத்துள்ள அறிக்கை:

“அதிமுக - பாஜக கூட்டணியின் பணபலம் - அதிகார பலம் ஆகியவற்றை மீறியும் - ஆங்காங்கே காவல்துறையினரின் அடக்குமுறைகளைச் சமாளித்தும் கட்சியினரும் - கூட்டணிக் கட்சித் தோழர்களும் தேர்தல் பணியாற்றி இருப்பது பாராட்டுக்குரியது.

அமைச்சர்களின் மிரட்டலுக்கு அஞ்சாமல் கட்சி வேட்பாளர்களும், கட்சியின் முன்னணியினரும் களத்தில் நின்று பணியாற்றி நடைபெற்ற வாக்குப்பதிவிற்குப் பேருதவியாக நின்று ஆக்கபூர்வமான ஜனநாயகக் கடமையாற்றியிருப்பது போற்றுதலுக்குரியது.

வாக்குச் சாவடிகளில் இருந்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான மையங்களில் கொண்டு வந்து வைக்கப்பட்ட பிறகு, அவற்றை காவல்துறையும் - தேர்தல் அதிகாரிகளும் பாதுகாத்துக் கொள்ளட்டும் என்று நம் வேட்பாளர்கள் இருந்திடலாகாது.

ஏற்கனவே நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் - மதுரை மக்களவைத் தொகுதியில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அறைக்குள் அதிகாரிகள் சிலர் அனுமதியின்றி நுழைந்ததை நாம் இந்த நேரத்தில் மறந்துவிடக் கூடாது.

எனவே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களை, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வரை கண்ணும் கருத்துமாகப் பாதுகாப்பது நம் தலையாயக் கடமையாகிறது.

எனவே, திமுக வேட்பாளர்களும், கூட்டணிக் கட்சி வேட்பாளர்களும் - கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் அனைவரும், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாக்கப்பட்ட மையங்களில் மிகுந்த கவனத்துடனும் - எச்சரிக்கையுடனும், 24 மணி நேரமும் - இரவு பகல் பாராது கண் விழித்துப் பாதுகாத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

காவல்துறையின் பணி என்று நினைத்து திமுக வேட்பாளர்கள் - தோழர்கள் கவனக்குறைவாக இருந்திடாமல் - வாக்குப் பதிவிற்கும், வாக்கு எண்ணிக்கைக்கும் உள்ள இடைப்பட்ட காலத்தில், மிகுந்த விழிப்புணர்வுடன் “டர்ன் டியூட்டி அடிப்படையில்” அமர்ந்து - கண்காணித்திட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

தேர்தல் பணி என்பது தொடரவே செய்கிறது என்பதை மனதில் வைத்து அனைவரும் எச்சரிக்கை உணர்வுடன் செயல்படக் கேட்டுக் கொள்கிறேன்”.

இவ்வாறு ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x