Published : 06 Apr 2021 05:28 PM
Last Updated : 06 Apr 2021 05:28 PM
கன்னியாகுமரி மாவட்டத்தில் சுட்டெரித்த வெயிலுக்கு மத்தியில் மக்கள் வரிசையில் காத்து நின்று வாக்களித்தனர். விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் வாக்குச்சாவடிகளில் கரோனா விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்களவை இடைத்தேர்தல் மற்றும் கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் இன்று (ஏப்.06) நடைபெற்று வருகிறது. மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 2,234 வாக்குச்சாவடிகளிலும் அதிகாலையில் இருந்தே வாக்களிக்க மக்கள் ஆர்வத்துடன் வந்திருந்தனர்.
காலை 7 மணியில் இருந்து வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் நாகர்கோவில், கன்னியாகுமரி, குளச்சல், பத்மநாபபுரம் பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட மையங்களில் மின்னணு இயந்திரங்களில் சிறு கோளாறு தென்பட்டதால் அவை சரிபார்க்கப்பட்டு அரை மணி நேரம், மற்றும் ஒரு மணி நேரம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 15 லட்சத்து 71 ஆயிரத்து 651 வாக்காளர்கள் உள்ளனர். இந்நிலையில், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணன், காங்கிரஸின் விஜய் வசந்த் உட்பட 12 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இதைப்போன்று கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 81 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில், நாகர்கோவில் தொகுதியில் திமுக சார்பில் சிட்டிங் எம்எல்ஏ சுரேஷ்ராஜன், பாஜக சார்பில் எம்.ஆர்.காந்தி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
கன்னியாகுமரி தொகுதியில் திமுக சார்பில் சிட்டிங் எம்எல்ஏ ஆஸ்டின், அதிமுக சார்பில் தளவாய் சுந்தரம் ஆகியோருக்கும், குளச்சல் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சிட்டிங் எம்எல்ஏ பிரின்ஸ், பாஜக சார்பில் குமரி ரமேஷ், பத்மநாபபுரம் தொகுதியில் திமுக சார்பில் சிட்டிங் எம்எல்ஏ மனோ தங்கராஜ், அதிமுக வேட்பாளர் ஜான்தங்கம், விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சிட்டிங் எம்எல்ஏ விஜயதரணி, பாஜக வேட்பாளர் ஜெயசீலன், கிள்ளியூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சிட்டிங் எம்எல்ஏ ராஜேஷ்குமார், தமாகா வேட்பாளர் ஜூட்தேவ் ஆகியோர் இடையே கடும் போட்டி உள்ளது.
குமரியில் உள்ள 2,234 வாக்குச்சாவடிகளிலும் கரோனா விதிமுறைகளுக்குட்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி 9.51 சதவீதம் வாக்கு பதிவாகியிருந்தது. 11 மணி நிலவரப்படி 21 சதவீதமும், மதியம் 1 மணி நிலவரப்படி 33.79 சதவீதமும், மாலை 3 மணி நிலவரப்படி 51.16 சதவீதம் வாக்குகளும் பதிவாகியிருந்தன. அதிகபட்சமாக நாகர்கோவில் தொகுதியில் 55.43 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன.
நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த், நாகர்கோவில் குருசடி புனித அந்தோனியார் தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் குடும்பத்துடன் வந்து வாக்களித்தார். எஸ்.பி.பத்ரிநாராயணன் குருசடி அந்தோனியார் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தார். கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவில் எஸ்.எல்.பி. பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
இதைப்போல், அனைத்து வேட்பாளர்களும் மக்களோடு மக்களாக நின்று வாக்களித்தனர். மக்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வரிசையில் காத்து நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT