Published : 06 Apr 2021 05:19 PM
Last Updated : 06 Apr 2021 05:19 PM
அரசியல் கட்சியினர் தந்த பணத்தை உள்ளூர் பிரமுகர்கள் எங்களுக்குத் தராமல் பதுக்கிக் கொண்டதால் வாக்களிக்கச் செல்லாமல் காத்திருக்கிறோம் என்று நரிக்குறவர்கள் கூச்சலிட்ட சம்பவம் வாக்குச்சாவடி அலுவலர்களை அதிர்ச்சி அடையச் செய்தது.
திருச்சி திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட திருநெடுங்குளம் ஊராட்சிக்குட்பட்டது தேவராயநேரி நரிக்குறவர் (காலனி) குடியிருப்புப் பகுதி. இங்கு ஆண்கள் 447 பேர், பெண்கள் 446 பேர் என மொத்தம் 893 பேர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் வாக்களிக்க வசதியாக நரிக்குறவர் காலனியிலேயே வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது.
காலை 11 மணி நிலவரப்படி 122 பேர் வாக்களித்திருந்த நிலையில், சுமார் 150க்கும் அதிகமானோர் வாக்களிக்கச் செல்லாமல் வாக்குச்சாவடி மையம் அருகே கூட்டமாக நின்று கூச்சலிட்டவாறு இருந்தனர்.
தகவலறிந்து போலீஸார், பத்திரிகையாளர்கள், வாக்குச்சாவடி அலுவலர்கள் அவர்களிடம் விசாரித்தபோது, “அரசியல் கட்சியினர் தந்த பணத்தை உள்ளூர் பிரமுகர்கள் எங்களுக்குத் தராமல் பதுக்கிக் கொண்டதால் வாக்களிக்கச் செல்லாமல் காத்திருக்கிறோம்" என்றனர்.
நாட்டில் ஏழை முதல் பணக்காரர்கள் வரை அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமை அளிக்கப்பட்டுள்ளது. இந்த உரிமை நாட்டில் வாக்களிக்கத் தகுதி பெற்ற அனைவருக்குமான ஜனநாயகக் கடமையுமாகும். எனவே, பணம் வாங்கிக் கொண்டு வாக்களிக்காமல், விழிப்புணர்வுடன் இருந்து நமக்கான பிரதிநிதியைத் தேர்வு செய்ய வேண்டும். இதை வலியுறுத்தியும், முழு வாக்குப்பதிவை வலியுறுத்தியும் தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டது.
மேலும், வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பவர்கள் மீதும், பணத்தைப் பெறுவோர் மீதும் இந்தியத் தண்டனைச் சட்டம் 171 பி பிரிவின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஓராண்டு சிறை தண்டனை விதிக்க முடியும் என்றும் தேர்தல் ஆணையம் எச்சரிக்கையும் விடுத்திருந்தது.
இந்த நிலையில், தேவராயநேரி நரிக்குறவர் காலனியில் பணம் தங்களுக்கு வந்து சேரவில்லை என்று கூறி வாக்களிக்க மறுத்துக் கூச்சலிட்ட சம்பவம் வாக்குச்சாவடி அலுவலர்கள் உள்ளிட்டோரை அதிர்ச்சி அடையச் செய்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT