Published : 06 Apr 2021 02:10 PM
Last Updated : 06 Apr 2021 02:10 PM
பெரியார் கொள்கையை நெஞ்சில் ஏந்தி, பகுத்தறிவு - சமூக நீதிப் பாதையில் பயணித்து, முதுமையிலும் பொதுத் தொண்டாற்றிய மார்க்சிய - பெரியாரியப் பொதுவுடைமை இயக்கத்தின் நிறுவனர் வே.ஆனைமுத்துவின் மறைவு திராவிட இயக்கத்திற்கும் தமிழ்ச் சமுதாயத்திற்கும் பேரிழப்பாகும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதுபெரும் பத்திரிகையாளர் (சிந்தனையாளன்- இதழ் நிறுவனர்-ஆசிரியர்) பெரியாரின் தொண்டர் வே.ஆனைமுத்து (96) இன்று (6.4.2021) புதுச்சேரியில் மாரடைப்பு காரணமாக காலமானார்.
இந்தியாவில் பொதுவுடைமை மலர மார்க்சிய பெரியாரிய அம்பேத்கரிய நெறியில் தேசிய இன வழிபட்ட சம உரிமையுடைய சமதர்ம குடியரசுகள் ஒருங்கிணைந்த கூட்டாட்சி அமைய வேண்டும் என்பதற்காக மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி என்கிற கட்சியை வே.ஆனைமுத்து 40 ஆண்டுகளுக்கு முன்னால் உருவாக்கினார்.
திருச்சி மாவட்டத்தில் முருக்கன்குடி எனும் ஊரில் ஆனைமுத்து பிறந்தார். 1944இல் வேலூரில் நடைபெற்ற பெரியாரின் சொற்பொழிவுகளைக் கேட்ட பிறகு சுயமரியாதைக் கொள்கைகளை ஏற்று, தொடர்ந்து கடைப்பிடித்து வருவதோடு, தனது எழுத்தின் மூலமும், பல்வேறு பணிகளின் மூலமும் தொடர்ந்து வளர்த்து வந்தார்.
பெரியார் குறித்தும், பெரியாரிசம், சமூக நீதி, இட ஒதுக்கீடு குறித்தும் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். இந்தியா முழுவதும் மாநாடுகள் நடத்தியும், வெளிநாடுகளிலும் மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் திருக்குறள் மாநாடுகள், இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவான, பெரியாரிய சிந்தனை மாநாடுகள் எனப் பலவற்றை நடத்தியுள்ளார்.
திராவிடர் கழகத்திலிருந்த அவர் கருத்து வேறுபாடு காரணமாக 1975-ல் விலகி பெரியார் சம உரிமைக் கழகம் என்ற அமைப்பைத் தோற்றுவித்தார். 1988-ல் அதை மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி என பெயர் மாற்றம் செய்து நடத்தி வந்தார். மண்டல் கமிஷன் அறிக்கை உருவாக பெரிதும் உறுதுணையாக இருந்தவர்.
பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு குறித்து இவர் அறிக்கையாகத் தயாரித்து மண்டலிடம் அளித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று புதுச்சேரியில் மாரடைப்பு காரணமாக காலமானார். அவரது இறுதிச் சடங்கு நாளை இரும்புலியூரில் உள்ள அவரது இல்லத்தில் நடக்கிறது.
பெரியாரியச் சிந்தனையாளர் வே.ஆனைமுத்துவின் மறைவுச் செய்தியறிந்து, அவரது மகனிடம் திமுக தலைவர் ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்புகொண்டு தமது இரங்கலைத் தெரிவித்தார்.
அவரது இரங்கல் செய்தி:
“பெரியார் கொள்கையை நெஞ்சில் ஏந்தி, பகுத்தறிவு - சமூக நீதிப் பாதையில் பயணித்து, முதுமையிலும் பொதுத் தொண்டாற்றிய மார்க்சிய - பெரியாரிய பொதுவுடைமை இயக்கத்தின் நிறுவனர் வே.ஆனைமுத்துவின் மறைவு திராவிட இயக்கத்திற்கும் தமிழ்ச் சமுதாயத்திற்கும் பேரிழப்பாகும்.
பெரியாரின் சிந்தனைகளைத் தொகுத்த அய்யாவின் பெரும்பணியும், சிந்தனையாளன் என்ற சீரிய இதழ் வாயிலாக அவர் வழங்கிய கருத்துகளும் என்றும் நிலைத்திருக்கும். பெரியார் பெருந்தொண்டர் ஆனைமுத்துவின் மறைவுக்கு திமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்”.
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT