Published : 06 Apr 2021 12:11 PM
Last Updated : 06 Apr 2021 12:11 PM
உதயநிதி ஸ்டாலின் கட்சி சின்னத்துடன் வந்து வாக்களித்ததை தேர்தல் ஆணையம் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், தேர்தல் விதியை மீறுவது திமுகவுக்கு வழக்கம்தான் என்று குஷ்பு பதிலளித்துள்ளார்.
ஆயிரம் விளக்கு வேட்பாளர் குஷ்பு இன்று தனது வாக்கை பதிவு செய்தார் பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு.
வாக்களித்ததை எப்படி உணருகிறீர்கள்?
மிகுந்த சந்தோஷமாக உள்ளது. கைவிரலில் இந்த மை படுவதை பெருமையாக, சந்தோஷமாக உணர்கிறேன். வேட்பாளராக இல்லாமல் எனது தொகுதியில் வாக்களிப்பது பெருமையாக உள்ளது. வேட்பாளராக பேசுவதற்கு முன் வாக்காளராக நான் பொதுமக்களுக்கு சொல்ல விரும்புவது அனைவரும் வாக்களியுங்கள்.ஒரு வேட்பாளராக அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் செல்வது வித்தியாசமான அனுபவமாக இருந்தது.
பாஜக வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?
இந்த நேரத்தில் அதுகுறித்து பேசக்கூடாது. தேர்தல் நடத்தைவிதி அமலில் உள்ளது அதை மீறக்கூடாது.
ஆனால் உதயநிதி தனது திமுக சின்னம் பொறித்த சட்டையுடன் வந்து வாக்களித்துள்ளாரே?
அது குறித்து தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்யவேண்டும். அப்படி செய்யக்கூடாது. அனைத்து விதிகளையும் மீறி செய்வோம் என்பது திமுகவினரிடம் உண்டு. தேர்தல் நடத்தை விதி மீறி அவர் செய்துள்ளார். தேர்தல் ஆணையம் தான் அதுகுறித்து முடிவெடுக்க வேண்டும்.
தேர்தல் முடிவு அதிமுகவுக்கு எதிரான அலை என்று ஸ்டாலின் கூறியுள்ளாரே?
ஒன்றும் சொல்வதற்கில்லை, மே.2 அதற்கு பதில் கிடைக்கும். அதன் பின்னர் ஸ்டாலினிடம் பேசுவோம்.
சசிகலாவுக்கு ஓட்டு இல்லை என்பதை எப்படி பார்க்கிறீர்கள்?
ஆமாம், இங்குகூட ஒரு இடத்தில் 220 பேர் லிஸ்டிலேயே இல்லை. இதை பார்க்கும்போது கஷ்டமாக உள்ளது. என் அத்தைக்கும் மயிலாப்பூரில் வாக்கு இல்லை. தேர்தல் ஆணையம் இதுபோன்ற மொத்த வாக்காளர்கள் இல்லாமல் போவதை கண்காணித்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
நடிகர் விஜய் பெட்ரோல் டீசல் விலை உயர்வை குறிப்பதற்காக சைக்கிளில் சென்று வாக்களித்ததாக சொல்கிறார்களே?
அவர் நேரத்தை வீணாக்க வேண்டாம் என்பதற்காக வீட்டுக்கு பக்கத்திலேயே வாக்குச்சாவடி இருப்பதால் சைக்கிளில் சென்றுள்ளார். இதற்கு ஒரு கற்பனை செய்து கதை உருவாக்கினால் அது குறித்து நாம் எதுவும் சொல்ல முடியாது.
தேர்தல் ஏற்பாடு எப்படி உள்ளது?
சிறப்பாக உள்ளது, சானிடைசர், கையுறை என பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக உள்ளது. முகக்கவசம் இல்லாத யாரையும் அனுமதிப்பதில்லை. ஏற்பாடுகள் சிறப்பாக உள்ளது.
இவ்வாறு அவர் பதிலளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment