Published : 06 Apr 2021 11:06 AM
Last Updated : 06 Apr 2021 11:06 AM
காலை 7 மணிக்குத் தேர்தல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், திருச்சி மாவட்டத்தில் காலை 9 மணி நிலவரப்படி 14.03 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. இந்த நிலையில், தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் என்று அதிமுக, திமுக வேட்பாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
திருச்சி கிழக்குத் தொகுதி அதிமுக வேட்பாளர் வெல்லமண்டி நடராஜன், பாலக்கரை பகுதியில் உள்ள மதரஸா பள்ளி வாக்குச்சாவடியில் தனது வாக்கைச் செலுத்தினார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, "தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்று முதல்வர் கே.பழனிசாமி தலைமையிலான ஆட்சி மீண்டும் அமையும்" என்றார்.
திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.நேரு, தில்லை நகர் மக்கள் மன்றம் வாக்குச்சாவடியில் தனது வாக்கைச் செலுத்தினார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "தமிழ்நாடு முழுவதும் திமுகவுக்குச் சாதகமான அலை வீசி வருகிறது. இந்தத் தேர்தல் மூலம் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் உறுதியாக ஏற்படும். மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்பார்" என்றார்.
திருவெறும்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் ப.குமார், பொன்மலையில் உள்ள குழந்தை இயேசு பள்ளி வாக்குச்சாவடியிலும், மண்ணச்சநல்லூர் தொகுதி அதிமுக வேட்பாளர் மு.பரஞ்ஜோதி, எட்டரை கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியிலும் தங்கள் வாக்குகளைச் செலுத்தினர்.
திருவெறும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி மேற்கு தொகுதிக்குட்பட்ட கிராப்பட்டி சிறுமலர் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் தனது தாயாருடன் வந்து வாக்களித்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து வருகின்றனர். திமுக கூட்டணி வெற்றி பெற்று, மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பதவி ஏற்பது உறுதி" என்றார்.
முசிறி தொகுதி திமுக வேட்பாளர் வேட்பாளர் என்.தியாகராஜன், தொட்டியம் ஒன்றியம் காடுவெட்டி கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கைச் செலுத்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT