Last Updated : 06 Apr, 2021 10:46 AM

2  

Published : 06 Apr 2021 10:46 AM
Last Updated : 06 Apr 2021 10:46 AM

தேர்தல் ஆணையம் ஆளும் கட்சிக்குச் சேவை செய்யும் நிறுவனம்: திருமாவளவன் குற்றச்சாட்டு

அரியலூர் மாவட்டம் அங்கனூரில் தனது வாக்கினைப் பதிவு செய்தார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்.

அரியலூர்

தேர்தல் ஆணையம் ஆளும் கட்சிக்குச் சேவை செய்யும் நிறுவனம் என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், சிதம்பரம் மக்களவைத் தொகுதி எம்.பி.யுமான தொல். திருமாவளவன் குற்றம் சாட்டினார்.

அரியலூர் மாவட்டம் அங்கனூரில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் இன்று (ஏப்.06) தனது வாக்கினைப் பதிவு செய்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

"பாஜகவின் சூழ்ச்சிகளை முறியடிக்கும் வகையில் தமிழக மக்கள் தங்கள் வாக்கினைச் செலுத்தி வருகின்றனர். வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருவது வரவேற்கத்தக்கது. அமைச்சர் ஜெயக்குமார், திமுக முக்கியப் பிரமுகர்கள் போட்டியிடக்கூடிய தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தது கண்டிக்கத்தக்கது.

அப்படிப் பார்த்தால், அதிமுக அமைச்சர்கள் போட்டியிடக்கூடிய அனைத்துத் தொகுதிகளின் தேர்தல்களையும் ரத்து செய்ய வேண்டும். தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் அனைத்துத் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, அதிமுக செயல்பட்டு வருவது கண்கூடாகத் தெரிகிறது. தேர்தல் ஆணையம் மத்தியிலும், மாநிலத்திலும் ஆளுங்கட்சியாக உள்ளவர்களுக்குச் சேவை செய்யும் நிறுவனமாகவே செயல்பட்டு வருகிறது.

தேர்தல் ஆணையம் என்பது தேர்தலை நடத்தித் தரக்கூடிய நிறுவனமாகவே உள்ளது. தேர்தல் நடத்தை விதிமீறல்களைக் கட்டுப்படுத்தும் ஒரு தன்னாட்சி அமைப்பாக இல்லாதது வேதனை அளிக்கும் செயலாகும்.

தேர்தலில் திமுக கூட்டணி நூற்றுக்கு நூறு சதவீதம் வெற்றி பெறும். திமுக அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடக்கூடிய புதுச்சேரி உள்ளிட்ட 7 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். தற்போது தமிழகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவான அலை வீசி வருகிறது".

இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x