Published : 06 Apr 2021 08:52 AM
Last Updated : 06 Apr 2021 08:52 AM
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 8.15 மணியளவில் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், மக்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களிப்பதாக செய்திகள் வருகின்றன. இதன்மூலம், ஆளுங்கட்சிக்கு எதிரான மக்கள் மனநிலை தெளிவாகத் தெரிகிறது என்றார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. சரியாக காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
தேர்தல் களத்தில் 3,998 வேட்பாளர்களும் கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் 12 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். தேர்தல் பாதுகாப்புப் பணியில், 300 கம்பெனி துணை ராணுவப் படையினர் உள்பட 1 லட்சத்து 58 ஆயிரத்து 263 வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
காலை வாக்குப்பதிவு தொடங்கியது முதலே, அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்களின் ஜனநாயகக் கடமையை ஆர்வத்துடன் நிறைவேற்றி வருகின்றனர்.
குடும்பத்துடன் வாக்களித்த ஸ்டாலின்:
அந்தவரிசையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள எஸ்ஐஇடி கல்லூரியில் தனது மனைவி துர்கா, மகன் உதயநிதி, மருமகள் கிருத்திகா ஆகியோருடன் வரிசையில் காத்திருந்து வாக்களித்துச் சென்றார். வாக்குப்பதிவு செய்வதற்கு முன், மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கருணாநிதி நினவிடங்களுக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார்.
எதிர்ப்பு அலை தெரிகிறது..
வாக்களித்த பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ஸ்டாலின், "குடும்பத்தோடு வந்து ஜனநாயகக் கடமையை ஆற்றியிருக்கிறோம். தமிழ்நாடு முழுவதும் மக்கள் அமைதியாக ஜனநாயக் கடமையை ஆற்றிக்கொண்டிருப்பதாக செய்திகள் வருகின்றன. ஆளும் கட்சிக்கு எதிராக மக்கள் மனநிலை உள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது. இதன் முடிவு மே 2ஆம் தேதி சிறப்பாக இருக்கும்.
தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளில் திருப்தியும் அல்ல அதிருப்தியும் அல்ல. தோல்வி பயம் காரணமாக தேர்தலை நிறுத்த அதிமுகவினர் முயன்றனர். ஆனால் அதற்கு தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது" என்றார்.
இத்தேர்தலில் ஸ்டாலின் சென்னை கொளத்தூர் தொகுதியிலும், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT