Published : 05 Apr 2021 09:44 PM
Last Updated : 05 Apr 2021 09:44 PM
புதுச்சேரியில் தேர்தலையொட்டி பல தொகுதிகளில் வெளிப்படையாக மும்முரமாக பணவிநியோகம் நடப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பொதுமக்கள் எடுத்துச் செல்வதை மட்டும் சோதித்து, கண்காணிக்கும் தேர்தல்துறையானது. வெளிப்படையாக விநியோகம் நடந்தும் அதை தடுக்காமல் செயல்பட்டதாக பலரும் ஆதங்கப்படுகின்றனர்.
ஆனால் அதேவேளையில் தேர்தல் ஆணையத்திடம், வெளிப்படையாக யாரும் புகார் தெரிவிக்கவும் தயங்கும் சூழலே நிலவுகிறது. போலீஸார் அணிவகுப்பு நடத்தியும் எளிதாக பலரும் பணவிநியோகத்தை நடத்தினர்.
புதுச்சேரியில் 30 தொகுதிகள் உள்ளன. புதுச்சேரி முழுக்க இம்முறை தேர்தலுக்கு பணம் விநியோகம் இல்லாமல் இருக்க கடும் நடவடிக்கைகளை தேர்தல்துறை எடுத்துள்ளதாக தெரிவித்தது. உச்சக்கட்டமாக 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
தேர்தல் பரப்புரை நிறைவடைந்த சூழலில் இன்று பணவிநியோகம் பல தொகுதிகளில் வெளிப்படையாக நடந்ததாகத் தெரிகிறது. குறிப்பாக ஒவ்வொரு பகுதியில் உள்ள கடைகள், முக்கியமானோர் கூடும் இடங்கள் தொடங்கி பல வகைகளில் பணவிநியோகத்துக்கான வழிகளை கட்சிகள் தேர்வு செய்துள்ளன.
இதுபற்றி அரசியல் கட்சி வட்டாரங்களில் விசாரித்தபோது, "பணவிநியோகம் எப்போதையும் விட துரிதமாக நடக்கிறது. இம்முறை ரேஷன்கார்டுகளை சீல் வைத்து பணம் தரும் முறை நடைமுறையில் உள்ளது.
அதேபோல் அடையாள அட்டை தந்து அதன் மூலம் பணம் தருகின்றனர். பூத் வாரியாக பிரிக்கப்பட்டு பணம் பட்டுவாடா நடக்கிறது. சில தொகுதிகளில் முக்கிய வேட்பாளர்கள் மட்டுமில்லாமல் சுயேட்சை வேட்பாளர்களும் ஆயிரக்கணக்கில் பணத்தை விநியோகிப்பதும் நடக்கிறது.
சிறிய ஊரான புதுச்சேரியில் தொகுதிவாரியாக பணிபுரியும் தேர்தல் துறையில் பறக்கும் படையில் உள்ள பலரும் இதை நன்கு அறிந்தும் கண்டுகொள்வதில்லை. முக்கியமாக பணவிநியோகத்தை பற்றி கட்சிக்காரர்களே வாயை திறப்பதில்லை. வெளிப்படையாக புகாரும் தருவதில்லை.
ஓரிரு இடங்களில் மட்டுமே புகார் செய்ய முன்வருகின்றனர். இம்முறை சில தொகுதிகளில் ரூ. 3 ஆயிரம் வரை வாக்குக்கு பணம் விநியோகிக்கப்படுகிறது. வென்ற பிறகு மேலும் பரிசு என்று உறுதி தரப்பட்டுள்ளது. பெரும்பாலான தொகுதிகளில் ஆயிரம் ரூபாய் தொடங்கி 2 ஆயிரம் வரை தருகிறார்கள். டோக்கன் முறையும் இருக்கிறது." என்று குறிப்பிட்டனர்.
சமூக ஆர்வலர்களிடம் விசாரித்தபோது, "சிறிய ஊரான புதுச்சேரியில் கட்சியினர் பலரும் இணைந்துதான் பணியாற்றுகின்றனர். அதுபோல் தேர்தல் பணியில் ஈடுபடுவோரும் உள்ளனர். அரசு பணியில் இருந்தாலும் கட்சி சார்பில்லாமல் இருப்போர் மிக குறைவுதான். அதனால் தேர்தல் பணி, பறக்கும்படை பணி, காவல் பணி என எப்பணியில் இருந்தாலும் பணவிநியோக விதிமீறல் தொடர்பாக பெரிதாக யாரும் வெளிப்படையாக கண்டுக்கொள்ளாத போக்கே இருக்கிறது. ஆங்காங்கே சில இடங்களில் பணபட்டுவாடா என்று குறிப்பிட்டு குறைந்த தொகையும், வழக்கு மட்டுமே பதிவாகிறது. கடந்த முறை தேர்தல் துறையால் பதிவான வழக்குகளின் நிலை இப்போது என்ன என்று நினைத்து பார்த்தாலே உண்மை நிலை தெரியும். முக்கியமாக தேர்தல் நடத்தை விதிமீறல் " என்கின்றனர் கோபத்துடன்.
தேர்தல் துறையில் முக்கிய அதிகாரிகள் பலரும் மின்னணு இயந்திரங்கள் அனுப்பி வைத்தல், வாக்குச்சாவடி பணிகளில் ஈடுபட்டிருந்த சூழலும் பணம் விநியோகிப்போருக்கு சாதகமாக அமைந்தது.
அணிவகுப்பு மரியாதை நடத்தி செல்லும் வழியில் நிற்போரை விசாரிக்கும் போலீஸார்.
செய்தியாளர் சந்திப்பை நடத்தாத தேர்தல்துறை
போலீஸாரும் குறிப்பிட்ட சில பகுதிகளில் அணிவகுப்புகளை நடத்தினர். சாதாரணமாக நின்றோரிடம் போலீஸார் விசாரித்துச் சென்றனர். வழக்கமாக தேர்தல் நடைபெறும் முதல் நாள் தலைமை தேர்தல் அதிகாரி அனைத்து மாநிலங்களிலும் செய்தியாளர்களை சந்தித்த சூழலில் புதுச்சேரியில் மட்டும் தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர் சந்திப்பை நடத்தவில்லை.
தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் இதுவரை இரு முறை மட்டுமே தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வாக்காளர்களின் செல்போன் எண்களுக்கு தலைமை தேர்தல் அதிகாரி அனுப்பிய எஸ்எம்எஸ்ஸில், "சட்டப்பேரவை தேர்தலில் எந்த தூண்டுதலுக்கும் அடிபணியாமல் கண்ணியத்துடன் வாக்களிக்க தேர்தல் துரை அன்புடன் வேண்டுகிறது" என்று வலியுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT