Published : 05 Apr 2021 07:31 PM
Last Updated : 05 Apr 2021 07:31 PM
புதுச்சேரியில் கடந்த தேர்தலில் வென்று சட்டப்பேரவை உறுப்பினர்களாகி மீண்டும் போட்டியிடும் 21பேரின் சராசரி சொத்து வளர்ச்சி ரூ. 1.61 கோடியாக உள்ளது. முதல் இடத்தில் உள்ளவரின் சொத்து மதிப்பு வளர்ச்சி 104 சதவீதமாக உள்ளது.
புதுச்சேரி தேர்தல் கண்காணிப்பகம் கடந்த 2016 தேர்தலைத்தொடர்ந்து மீண்டும் 2021 தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களை ஆய்வு செய்து அறிக்கை வெளியிடுகிறது. இதுபற்றி அறிக்கை வெளியிட்டு தேர்தல் கண்காணிப்பக ஒருங்கிணைப்பாளர் ஜோசப் விக்டர் ராஜ் கூறியதாவது:
தேர்தல்களில் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்துள்ள கடந்த தேர்தலில் வென்றோரின் தகவல்கள் அடிப்படையில் ஓப்பீடு செய்கிறோம். கடந்த 2016ம் ஆண்டு வென்று சட்டப்பேரவை உறுப்பினராகி , தற்போது மீண்டும் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து விவரங்களை பிரமாண பத்திரங்களை அடிப்படையாக கொண்டு தகவல்களை ஒப்பீடு செய்துள்ளோம்.
மறுதேர்தல் காணும் எம்எல்ஏக்களின் சொத்து பற்றிய ஒப்பீடு:
சராசரி சொத்து மதிப்பு கடந்த 2011தேர்தலில் வென்று 2016 தேர்தலில் மீண்டும் போட்டியிட்ட 21 பேரின் சராசரி சொத்து மதிப்பு, 2016 சட்ட மன்ற தேர்தலின் போது ரூபாய் 9.56 கோடியாகும்.
தற்போது 2016 தேர்தலில் போட்டியிட்டு வென்று எம்எல்ஏவாகி மீண்டும் 2016 தேர்தலில் போட்டியிடும் 21 பேரின் சராசரி சொத்து மதிப்பு ரூ. 11.17 கோடியாக உள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் சராசரி சொத்து மதிப்பு வளர்ச்சி (2016-2021):
கடந்த தேர்தலில் (2016) போட்டியிட்டு சட்ட மன்ற உறுப்பினராகி, மீண்டும் இத்தேர்தலில் (2021) போட்டியிடும் வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு வளர்ச்சி ரூபாய் 1.61 கோடியாகும்.
சொத்து மதிப்பு வளர்ச்சி சதவீதம்:
மறுதேர்தல் காணும் 21 பேரின் சொத்துக்களின் சராசரி வளர்ச்சி 17% ஆகும்.
மறுதேர்தல் காணும் வேட்பாளர்களில், அதிகளவு சொத்து மதிப்பு அதிகரித்த முதல் 10 வேட்பாளர்கள்:
முதலிடத்தில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் திருமுருகன் உள்ளார். காரைக்கால் வடக்கில் போட்டியிடும் இவருக்கு கடந்த 2016 தேர்தலில் ரூ. 13.02 கோடியாக இருந்த சொத்து, 2021 தேர்தலில் ரூ. 13.51 கோடி அதிகரித்து ரூ. 26.53 கோடியாக உயர்ந்துள்ளது. சொத்து மதிப்பு வளர்ச்சி 104 சதவீதம்.
2ம் இடத்தில் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி கடந்த 2016 தேர்தலில் போட்டியிடும் போது ரூ. 29.53 கோடியாக இருந்த சொத்து, 2021 தேர்தலில் ரூ. 8.86 கோடி அதிகரித்து ரூ. 38.39 கோடியாக உயர்ந்துள்ளது. சொத்து மதிப்பு வளர்ச்சி 30 சதவீதம்.
3ம் இடத்தில் முதலியார்பேட்டை அதிமுக வேட்பாளர் பாஸ்கர் கடந்த 2016 தேர்தலில் ரூ. 10.67 கோடியாக இருந்த சொத்து, 2021 தேர்தலில் ரூ. 5.61 கோடி அதிகரித்து ரூ. 16.28 கோடியாக உயர்ந்துள்ளது. சொத்து மதிப்பு வளர்ச்சி 53 சதவீதம்.
4ம் இடத்தில் திமுக தெற்கு மாநில அமைப்பாளர் சிவா உள்ளார். 2016ல் இவரது சொத்து மதிப்பு ரூ. 15.7 கோடியாக இருந்தது. 2021ல் ரூ.20.7 கோடியாக உள்ளது. சொத்து மதிப்பு வளர்ச்சி ரூ. 5.6 கோடி. வளர்ச்சி சதவீதம் 32.
5ம் இடத்தில் என்ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் சுகுமாறன் உள்ளார். கடந்த 2016ல் ரூ. 12.5 கோடியாக இருந்த சொத்து 2021ல் ரூ. 16.4 கோடியாகியுள்ளது.
6ம் இடத்தில் காங்கிரஸ் அனந்தராமன் உள்ளார். ரூ. 2.1 கோடியிலிருந்த சொத்து தற்போது ரூ. 5.3 கோடியாகியுள்ளது.
7ம் இடத்தில் காங்கிரஸ் கட்சி முன்னாள் அமைச்சர் கந்தசாமி உள்ளார். ரூ. 5.9 கோடியில் இருந்த சொத்து ரூ. 8.1 கோடியாகியுள்ளது.
8ம் இடத்தில் சந்திரபிரியங்கா (என்.ஆர்.காங்கிரஸ்) உள்ளார். ரூ. 2 கோடியில் இருந்த சொத்து மதிப்பு ரூ. 4 கோடியாகியுள்ளது.
9ம் இடத்தில் அமைச்சராக இருந்த ஷாஜகான் உள்ளார். காங்கிரஸை சேர்ந்த அவரின் சொத்து மதிப்பு ரூ. 1.3 கோடியில் இருந்து ரூ. 2.1 கோடியாகியுள்ளது.
10ம் இடத்தில் உள்ள தனவேலுவின் (என்.ஆர்.காங்) சொத்து மதிப்பானது ரூ. 30.3 லட்சத்திலிருந்து ரூ. 1.05 கோடியாகியுள்ளது என்று குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT