Published : 13 Nov 2015 10:32 AM
Last Updated : 13 Nov 2015 10:32 AM
கடலூர் மாவட்டம் சிதம்பரம், குள்ளஞ்சாவடி, ஆண்டிக்குப்பம் பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் உணவு, குடி நீர் உள்ளிட்ட பொருள்கள் வழங்கக் கோரி மறியலில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கிய மக்கள் 28 ஆயிரம் பேர் ஆங்காங்கே உள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில் கருமாச்சி பாளையத்தைச் சேர்ந்த 300 பேர் குள்ளஞ்சாவடியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
அவர்களை இரவில் மண்டப உரிமையாளர் அங்கிருந்து வெளியேற்றி விட்டதாகக் கூறப்படுகிறது. அவர்கள் நேற்று காலை நிவாரண உதவிகள் மற்றும் பாதுகாப்பான இடம் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதேபோல குறிஞ்சிப்பாடி பகுதியில் பல இடங்களில் மறியல் போராட்டங்கள் நடந்தன. சம்பவ இடங்களுக்கு அதிகாரிகள் சென்று சமாதான பேச்சுவார்த்தை நடத்தி நிவாரண பொருட்கள் வழங்கினர்.
சிதம்பரம் அருகே உள்ள மண்டபம் கிராமத்தில் 150-க்கும் மேற்பட்டார் வசித்து வந்தனர். தொடர் மழையால் குடியிருப்பு பகுதியில் தண்ணீர் புகுந்தது. இதனால் அவதியடைந்த மக்கள் கடந்த 2 நாட்களாக சிதம்பரம் - காட்டுமன்னார்கோயில் சாலையில் படுத்து உறங்கினர். இவர்களுக்கு உணவுகூட வழங்கப்படவில்லையாம். இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் உணவு மற்றும் மருத்துவ வசதி வழங்க கோரி நேற்று காலை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சிதம்பரம்- காட்டுமன்னார்கோவில் சாலையில் 50-க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர். நோயாளிகளை சாலை யில் படுக்க வைத்தும், சாலையில் அடுப்பு பற்ற வைத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த சிதம்பரம் தாலுகா போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டக்காரர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி னர். அவர்கள் கோட்டாட்சியர் சம்பவ இடத்துக்கு வரவேண்டும் என்று கூறினர். இதையடுத்து போலீஸார் போராட்டக்காரர்களை குண்டுகட்டாக தூக்கி அகற்றினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே நிவாரண உதவி கள் சரிவர கிடைக்கவில்லை என வும், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பாரபட்சத்தோடு செயல்படுவதாக வும், மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவில்லை எனவும், மின் இணைப்பு வழங்குவதற்கு கட்டணம் கேட்பதாகவும் கூறி குள்ளஞ்சாவடி, குறிஞ்சிப்பாடியை அடுத்த ஆண்டிக்குப்பம், சிதம்பரம் அருகே து.மண்டபத்திலும் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட் டனர்.
இந்த மறியலில் பங்கேற்ற கிராம மக்கள், தங்கள் கிராமம் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அரசின் நிவாரண உதவிகளும் வழங்கப்படவில்லை எனவும், எங்கள் ஊர் வழியே செல்லும் ஆட்சியரும் கிராமத்தை புறக்கணித்துச் செல்வது எந்தவகையில் நியாயம் என கேள்வி எழுப்பினர்.
அப்போது அங்கிருந்த போலீஸார் அவர்களை கலைந்து போகுமாறு எச்சரித்த நிலையிலும், அவர்கள் தொடர்ந்து சாலைமறியல் செய்ததோடு, கோட்டாட்சியர் வந்து பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என கோஷமிட்டனர். இதைத் தொடர்ந்து போலீஸார் அவர்களை தடியடி நடத்தி கலைந்துபோகச் செய்தனர்
மறியலில் சிக்கிய ஸ்டாலின்
இதனிடேயே குறிஞ்சிப்பாடி கல்குணம் கிராமத்துக்கு சென்று விட்டு, மருவாய்க்கு செல்ல திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குறிஞ்சிப்பாடி வழியாக செல்லும் போது ஆண்டிக்குப்பம் பகுதியில் சாலை மறியலில் சிக்கிக் கொண் டார். இதையடுத்து அவருடன் சென்ற முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி மற்றும் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அக்கிராம மக்களிடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தி ஸ்டாலிக்கு வழிவிட செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT