Published : 05 Apr 2021 06:12 PM
Last Updated : 05 Apr 2021 06:12 PM
தருமபுரி மாவட்ட மலை கிராமங்களுக்குத் தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கழுதைகள் மீது ஏற்றி எடுத்துச் செல்லப்பட்டன.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட வட்டுவனஅள்ளி ஊராட்சியில் கோட்டூர் மலை, ஏரிமலை, அலகட்டு ஆகிய மலை கிராமங்கள் உள்ளன. இதில், கோட்டூர் மலையில் சுமார் 200 வாக்காளர்கள் வசிக்கின்றனர். ஏரிமலையில் சுமார் 150 வாக்காளர்களும், அலகட்டு மலையில் 100 வாக்காளர்களும் வசிக்கின்றனர். இந்த மலைகளுக்கு இதுவரை சாலைகள் அமைக்கப்படவில்லை.
எனவே, இந்த 3 மலைகளுக்கும் அடிவாரத்தில் இருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் நடந்தே செல்ல வேண்டும். தேர்தலின்போது கோட்டூர் மலையிலும், ஏரிமலை, அலகட்டு மலை ஆகிய இரு கிராமங்களுக்கும் சேர்த்து ஏரிமலையிலும் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும். சாலை வசதி இல்லாத நிலையில் இந்த மலை கிராமங்களுக்கு வாகனங்களில் பயணிக்க முடியாது. மாற்றாக, கழுதைகள் மீதுதான் ஒவ்வொரு தேர்தலின்போதும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன.
இந்த 3 மலை கிராமங்களிலும் வசிக்கும் மக்களின் தேவைக்கான பொருட்கள் ஆண்டு முழுக்க வாடகை அடிப்படையில் அடிவாரத்தில் இருந்து கழுதைகள் மீது ஏற்றியே எடுத்துச் செல்லப்படுகின்றன. ரேஷன் பொருட்களும் இவ்வாறுதான் மேலே செல்கின்றன. மலையில் விளையும் தானியங்களை விற்பனை செய்ய அடிவாரம் வரை கழுதைகள் மீது வைத்துத்தான் மலைகிராம மக்கள் எடுத்துச் செல்கின்றனர்.
இதற்காகவே கோட்டூர் மலை அருகிலுள்ள கன்சால் பைல் கிராமத்தைச் சேர்ந்த சின்ராஜி என்பவர் கழுதைகளை வளர்த்து வருகிறார். அவர் வளர்க்கும் கழுதைகளுக்கு ரஜின், கமல், அஜித், விஜய், கல்யாணி என்றெல்லாம் செல்லமாகப் பெயரிட்டு அழைத்து வருகிறார்.
இந்நிலையில் நாளை (6-ம் தேதி) நடக்க உள்ள தமிழக சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இந்தக் கழுதைகள் மீது ஏற்றப்பட்டே இன்று மாலை கோட்டூர், ஏரிமலைகளுக்கு பலத்த பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT