Published : 05 Apr 2021 05:43 PM
Last Updated : 05 Apr 2021 05:43 PM
கொளத்தூர் உள்ளிட்ட 5 தொகுதிகளில் திமுகவினர் பணம் விநியோகித்ததாக கூறி, அத்தொகுதிகளில் தேர்தலை நிறுத்த வேண்டும் என, அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் தேர்தல் ரத்து குறித்து அகில இந்திய தலைமை தேர்தல் ஆணையமே முடிவு செய்யும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.
தமிழகத்தில் நாளை தேர்தல் நடைபெறும் நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டது, புகார் அளித்தப்பின் பேட்டி அளித்த அமைச்சர் ஜெயக்குமார், “கொளத்தூர், சேப்பாக்கம், காட்பாடி, திருவண்ணாமலை, திருச்சி மேற்கு ஆகிய 5 தொகுதிகளிலும் திமுக பணம் விநியோகித்துள்ளது.
வாக்காளர்களின் மொபைல் எண்களை பெற்று 'கூகுள் பே' மூலமாக, வாக்காளர்களின் வங்கிக்கணக்குக்கு பணம் அனுப்புகின்றனர். குறிப்பாக, கொளத்தூர் தொகுதியில் ஒவ்வொரு மகளிர் சுய உதவிக்குழுக்களையும் அழைத்து ஒவ்வொரு குழுவுக்கும் ரூ.10 ஆயிரம் வீதம் பணம் விநியோகித்துள்ளனர்.
குறிப்பாக, இந்த 5 தொகுதிகளில் பணத்தை வாரி வாரி இறைக்கின்றனர். இந்த 5 தொகுதிகளிலும் தேர்தலை ரத்து செய்ய வெண்டும். தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அதிமுக சார்பில் தேர்தல் அதிகாரியிடம் மனு கொடுத்துள்ளோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்”. என்று தெரிவித்தார்.
இந்நிலையில் 5 தொகுதிகளில் தேர்தல் ரத்து குறித்த புகார் வந்துள்ளதே என்ன முடிவெடுத்துள்ளீர்கள் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர் கூறியதாவது.
“தேர்தல் சம்பந்தமாக வரும் புகார் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தினமும் புகார்களை அப்படியே அனுப்புகிறோம். அதை தேர்தல் ஆணையம் பரிசீலித்து முடிவெடுக்கும். தற்போது புகார் அளிக்கப்பட்ட அந்த தொகுதிகளுக்கு தேர்தல் நடத்துவதா? ரத்து செய்வதா? என்பதை தேர்தல் ஆணையம் தான் முடிவெடுக்கும். தேர்தல் ஆணையம் எப்போது நினைத்தாலும் நடவடிக்கை எடுக்க முடியும். நடவடிக்கை வருமா? வராதா? என்பதை நான் கூற முடியாது”.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT