Published : 05 Apr 2021 04:22 PM
Last Updated : 05 Apr 2021 04:22 PM
தமிழகத்தில் 88,900 வாக்குச்சாவடிகளில் 10,813 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை, 530 வாக்குச்சாவடிகள் மிகப்பதற்றமானவை, தேர்தல் பிரச்சார காலத்தில் பறக்கும்படை, வருமான வரித்துறை மூலம் ரூ.428.46 கோடி மதிப்புள்ள பணம், நகை, பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கூறியதாவது:
“தமிழகம் முழுவதும் 88,900 வாக்குச்சாவடிகள் உள்ளன. தமிழகத்தில் 50% வாக்குச்சாவடிகள் கண்காணிப்பு கேமரா வசதியுடன் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்தலில் 4.17 லட்சம் பேர் தேர்தல் தொடர்பான பணியில் ஈடுபட உள்ளனர். தமிழகத்தில் மொத்தம் 6.28 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் ஆவர்.
வாக்குச்சாவடிகளை கண்காணிக்க 8014 மைக்ரோ அப்சர்வர்கள் உள்ளனர். அவர்கள் அப்சர்வர்கள் மேற்பார்வையில் கூடுதலாக சென்று நேரடி பார்வையில் பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணித்து தேர்தல் பார்வையாளர்களுக்கு அறிக்கை அளிப்பார்கள். பதற்றமான வாக்குச்சாவடிகள் என 10,813 வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. 530 வாக்குச் சாவடிகள் மிகவும் பதற்றமானவை எனக்கண்டறியப்பட்டுள்ளது.
இதில் பழைய எண்ணிக்கை மாற்றமாக வாய்ப்புள்ளது. நேற்றைய 3 மணி நிலவரப்படி 428.46 கோடி மதிப்புள்ள பணம், பரிசுப்பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் பறக்கும்படை, வருமான வரித்துறை உள்ளிட்டோரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் ரூ.225.52 கோடி ரொக்கப்பணம், மதுபானங்கள் ரூ 4.61 கோடி, போதை பொருட்கள் 2.21 கோடி, தங்கம் வெள்ளி ரூ.161.11 கோடி, துணி, பரிசு பொருட்கள் ரூ.20.01 கோடி மதிப்புள்ளவைகளும் பிடிக்கப்பட்டுள்ளன.
பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு பிரெய்லி முறையில் 3,538 வாக்காளர் அடையாள அட்டை விநியோகித்துள்ளோம். வாக்காளர் தகவல் சீட்டு 60,884 பேருக்கு ப்ரெய்லி முறையில் கொடுத்துள்ளோம். 21 லட்சத்து 39 ஆயிரத்து 395 புதிய விண்ணப்பங்களுக்கு ஸ்பீடு போஸ்டு மூலம் எபிக் கார்டுகள் விநியோகித்துள்ளோம். முகவரி மாற்றம் குறித்து படிவம் 8 மூலமாக கடைசி நேரத்தில் மார்ச் 9 வரை விண்ணப்பித்திருந்த 76,897 பேருக்கு முகவரி மாற்றம் செய்து அடையாள அட்டைகளை ஸ்பீடு போஸ்டு மூலம் அனுப்பியுள்ளோம்.
தபால் வாக்குகளுக்கு என 1,04,282 வாக்குச்சீட்டுகள் கொடுத்துள்ளோம், அதில் 1,03,202 வாக்களிக்கப்பட்டு பெறப்பட்டுள்ளது. இன்று மாலைவரை கடைசி நேரம் உள்ளது. அதேப்போன்று மாற்றுத்திறனாளிகளுக்கு 28,531 தபால் வாக்குகள் 28159 வாக்களிக்கப்பட்டு பெறப்பட்டுள்ளது. கரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு 30 தபால் வாக்குகள் அளிக்கப்பட்டு அதில் 28 வாக்களிக்கப்பட்டு பெறப்பட்டுள்ளது.
அதேப்போன்று வாக்குப்பதிவு பணியில் ஈடுபடுவர்கள் தபால் வாக்களிக்க 4 லட்சத்து 91 ஆயிரத்து 27 பேருக்கு அளிக்கப்பட்டதில் 2,00,592 பேர் வாக்களித்து திரும்ப அளித்துள்ளனர். இவர்கள் வாக்களிக்க கடைசி நாள் வாக்கு எண்ணும் தேதியான மே 2 -க்கு முன் வருவதை ஏற்றுக்கொள்வோம்”.
இவ்வாறு சத்ய பிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT