Published : 05 Apr 2021 02:58 PM
Last Updated : 05 Apr 2021 02:58 PM
கோவை சட்டப்பேரவைத் தொகுதிகளின் பாதுகாப்பு அறைகளில் இருந்து, வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி இன்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நாளை (6-ம் தேதி) நடக்கிறது. மாவட்டத்தில் 10 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. மாவட்டம் முழுவதும் 4,427 வாக்குச்சாவடிகள் உள்ளன. சட்டப்பேரவைத் தேர்தலுக்காகப் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கடந்த மாதம் கணினி அடிப்படையில் கணக்கீடு செய்து சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஒதுக்கப்பட்டன. இவ்வாறு ஒதுக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள், அந்தந்த சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட காப்பு அறைகளில் (ஸ்ட்ராங் ரூம்) இருப்பு வைக்கப்பட்டன.
அதன்படி, மேட்டுப்பாளையம் தொகுதியில் நஞ்சை லிங்கம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியிலும், சூலூர் தொகுதியில் மார்க்கெட் சாலையில் உள்ள சமூகநலப் பாதுகாப்பு மையக் கட்டிடத்திலும், கவுண்டம்பாளையம் தொகுதியில் அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியிலும், கோவை வடக்குத் தொகுதியில் சித்தாப்புதூர் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியிலும், தொண்டாமுத்தூர் தொகுதியில் பேரூர் வட்டாட்சியர் அலுவலகத்திலும், கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் ராம்நகர் மாநகராட்சி பெண்கள் உயர்நிலைப் பள்ளியிலும், சிங்காநல்லூர் தொகுதியில் உப்பிலிபாளையம் பெர்க்ஸ் பள்ளி வளாகத்திலும், கிணத்துக்கடவு தொகுதியில் மதுக்கரை மலையன் மெட்ரிக் பள்ளியிலும், பொள்ளாச்சி மற்றும் வால்பாறை தொகுதிக்கான இயந்திரங்கள் நல்லமுத்து கவுண்டர் மகாலிங்கம் கல்லூரியிலும் இருப்பு வைக்கப்பட்டு இருந்தது.
வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பும் பணி
சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட காப்பு அறைகளில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், அந்தந்த வாக்குச்சாவடிக்கு எடுத்து அனுப்பி வைக்கும் பணி இன்று (5-ம் தேதி) காலை முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இயந்திரங்களை ஏற்றிச் செல்ல லாரிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. அந்த வாகனங்கள், அவிநாசி சாலையில் உள்ள போலீஸ் பயிற்சிக் கல்லூரி வளாகத்தில் நிறுத்தப்பட்டு, ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன. ஒவ்வொரு வாகனத்துக்கும் ஒரு எஸ்.ஐ., இரண்டு காவலர்கள், இரண்டு ஊர்க்காவல் படையினர் ஒதுக்கப்பட்டனர்.
பின்னர், அந்த லாரிகள் அங்கிருந்து புறப்பட்டு, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிக்குட்பட்ட காப்பு அறைக்குச் சென்றன. அங்கிருந்த தேர்தல் நடத்தும் அலுவலர் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர், இயந்திரங்களைச் சரிபார்த்து, சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு அனுப்பி வைத்தனர். சில வாகனங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு மையங்களுக்கான இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பெட்டிகள் எடுத்துச் செல்லப்பட்டன. சில வாகனங்களில் அதை விடக் கூடுதலாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள பெட்டிகள் எடுத்துச் செல்லப்பட்டன. காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் இணைந்து இந்தப் பணிகளை மேற்கொண்டனர்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்
இதுகுறித்து மாவட்டத் தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறும்போது, ‘‘மேட்டுப்பாளையம் தொகுதிக்கு 496 பேலட் யூனிட், கன்ட்ரோல் யூனிட் இயந்திரங்கள், 550 வாக்குப்பதிவு சரிபார்ப்பு இயந்திரங்கள், சூலூர் தொகுதிக்கு 556 பேலட் மற்றும் கன்ட்ரோல் யூனிட் இயந்திரங்கள், 616 வாக்குப்பதிவு சரிபார்ப்பு இயந்திரங்கள், கவுண்டம்பாளையம் தொகுதிக்கு 812 பேலட், கன்ட்ரோல் யூனிட் இயந்திரங்கள், 900 வாக்குப்பதிவு சரிபார்ப்பு இயந்திரங்கள், கோவை வடக்குத் தொகுதிக்கு 1198 பேலட் யூனிட் இயந்திரங்கள், 599 கன்ட்ரோல் யூனிட் இயந்திரங்கள், 664 வாக்குப்பதிவு சரிபார்ப்பு இயந்திரங்கள், தொண்டாமுத்தூர் தொகுதிக்கு 566 பேலட் யூனிட், கன்ட்ரோல் யூனிட் இயந்திரங்கள், 627 வாக்குப்பதிவு சரிபார்ப்பு இயந்திரங்கள், கோவை தெற்கு தொகுதிக்கு 862 பேலட் யூனிட் இயந்திரங்கள், 431 கன்ட்ரோல் யூனிட் இயந்திரங்கள், 478 வாக்குப்பதிவு சரிபார்ப்பு இயந்திரங்கள், சிங்காநல்லூர் தொகுதிக்கு 1078 பேலட் யூனிட் இயந்திரங்கள், 539 கன்ட்ரோல் யூனிட் இயந்திரங்கள், 598 வாக்குப்பதிவு சரிபார்ப்பு இயந்திரங்கள், கிணத்துக்கடவு தொகுதிக்கு 582 பேலட், கன்ட்ரோல் யூனிட் இயந்திரங்கள், 646 வாக்குப்பதிவு சரிபார்ப்பு இயந்திரங்கள், பொள்ளாச்சி தொகுதிக்கு 382 பேலட் யூனிட், கன்ட்ரோல் யூனிட் இயந்திரங்கள், 423 வாக்குப்பதிவு சரிபார்ப்பு இயந்திரங்கள், வால்பாறை தொகுதிக்கு 353 பேலட் யூனிட், கன்ட்ரோல் யூனிட் இயந்திரங்கள், 392 வாக்குப்பதிவு சரிபார்ப்பு இயந்திரங்கள் ஆகியவை அனுப்பப்படுகின்றன. இன்று மாலைக்குள் இப்பணிகள் முடிந்து விடும்’’ என்று தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT