Published : 05 Apr 2021 02:25 PM
Last Updated : 05 Apr 2021 02:25 PM
தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை, தமிழகத்தில் இன்றுவரை 32 லட்சம் பேர் கரோனா தடுப்பூசி போட்டுள்ளனர், இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்று சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை, டிஎம்எஸ் வளாகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:
’’வாக்காளர்கள் நாளை (ஏப்.6) கட்டாயம் முகக் கவசம் அணிந்துதான் வாக்களிக்கச் செல்ல வேண்டும். தேர்தல் மையங்களில் முகக்கவசம் வழங்குவார்கள் என்று நினைத்துக்கொண்டு செல்லக்கூடாது. வாக்காளர்களுக்குக் கையுறை வழங்கப்படும். தேர்தல் மையங்களில் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் செய்துள்ளனர்.
தேர்தல் மையங்களில் அலுவலர்களுக்குத் தேவையான சர்ஜிக்கல் மாஸ்க், பிபிஇ கிட், கையுறை, தெர்மாமீட்டர் உள்ளிட்ட அனைத்து உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளன. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் கடைசி ஒரு மணி நேரத்தில் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்துக்கு 54 லட்சம் கரோனா தடுப்பூசிகள் வந்துள்ளன. சுகாதாரப் பணியாளர்கள் முழு வீச்சில் செயல்படுகின்றனர். 400-க்கும் மேற்பட்ட தடுப்பூசி போடும் மையங்கள் செயல்படுகின்றன. ஆனால் அதிகபட்சமாக ஒரு நாளில் 1 லட்சத்து 52 ஆயிரம் பேர் மட்டுமே தடுப்பூசி போட்டிருக்கின்றனர். நாம் தடுப்பூசி போடும் எண்ணிக்கைக்கு ஏற்ப மத்திய அரசு, தடுப்பூசிகளை மாநிலத்துக்கு அனுப்பும்.
தற்போது நாள்தோறும் சுமார் 15 ஆயிரம் பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வருகின்றனர். கேட்டால் தேர்தல் வருகிறது என்கின்றனர். தேர்தலுக்கும் தடுப்பூசி போடுவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தேர்தலுக்குப் பிறகு தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளோம்.
கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தமிழகத்தில் இன்றுவரை 32 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், தடுப்பூசி குறித்து விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை மேற்கொள்ளவில்லை. 7-ம் தேதிக்குப் பிறகு மீண்டும் முழுமையாகப் பிரச்சாரம் செய்வோம்.
தடுப்பூசி போட்டுக்கொண்டால் கரோனா வராது என்பதை உறுதியாகக் கூறமுடியாவிட்டாலும், தொற்று ஏற்பட்டால் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்பதே உண்மை. 75 முதல் 80 சதவீதம் அளவுக்குத் தடுப்பூசி கரோனாவைக் கட்டுப்படுத்துகிறது’’.
இவ்வாறு சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT