Published : 05 Apr 2021 01:32 PM
Last Updated : 05 Apr 2021 01:32 PM
தளி தொகுதியில் கர்நாடக பாஜக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் கலவரச் சூழல் ஏற்படுத்துவதாக, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, முத்தரசன் இன்று (ஏப். 05) வெளியிட்ட அறிக்கை:
"கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தளி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக, தேர்தல் நடைமுறை விதிகளுக்கு விரோதமான செயல்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து பாஜகவை சேர்ந்த அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் தளி தொகுதியில் தங்கி ஒரு கலவரச் சூழலை ஏற்படுத்தி வருகிறார்கள். கர்நாடக மாநில எல்லையை ஒட்டியுள்ள ஆனேகல் என்ற ஊரில், சாய் என்ஜினியரிங் கல்லூரி மற்றும் மல்லிகை பார்ம் ரிசார்ட்ஸ், சரவணா லாட்ஜ், அஞ்செட்டி , மாரிப்பள்ளி கிராமத்தில் உள்ள ரிசார்ட் உள்ளிட்ட இடங்களில் இவர்களில் பலர் தங்கி இருக்கிறார்கள்.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமானவர்கள் தொகுதியில் பல இடங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் மூலமாக வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடந்து வருகிறது. தேர்தல் நாளன்று பல வாக்குச்சாவடிகளில் கலவரம் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளனர். அதன் வழியே, தளி தொகுதியில் தேர்தலை நிறுத்தி வைப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நாளான 04.04.2021 மாலை 7 மணிக்கு மேல் தொகுதி வாக்காளராக இல்லாதவர்கள் அத்தொகுதியை விட்டு வெளியேறிவிட வேண்டும். கர்நாடகத்தைச் சேர்ந்த நூற்றுக் கணக்கானவர்கள் இன்னும் தொடர்ச்சியாக தங்கியிருப்பது தேர்தல் நடைமுறை விதிகளுக்கு விரோதமானதாகும். கர்நாடக மாநிலத்தில் பாஜக ஆட்சியில் இருப்பதாலும், தளி சட்டப்பேரவைத் தொகுதி கர்நாடக மாநில எல்லைப் பகுதியில் இருப்பதாலும். தங்களுடைய ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி இந்த விதிமீறல்கள் செய்து வருவதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு கடுமையாகக் கண்டிக்கிறது.
தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி தலையிட்டு துரித நடவடிக்கை மேற்கொண்டு, சட்டப்பேரவைத் தொகுதியில் தேர்தல் விதிமுறைகளுக்கு விரோதமாக தங்கியுள்ள, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த அந்த தொகுதியில் வாக்காளராக இல்லாதவர்கள் அனைவரையும் உடனடியாக வெளியேற்ற தக்க நடவடிக்கை எடுக்குமாறும், சுதந்திரமான. நியாயமான, நடுநிலையான தேர்தல் நடப்பதை உறுதிப்படுத்துமாறும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது".
இவ்வாறு இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT