Published : 05 Apr 2021 01:10 PM
Last Updated : 05 Apr 2021 01:10 PM
காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு தொகுதியில் பாஜக வாக்காளர்களுக்குத் தங்கக் காசு கொடுத்ததாகவும், பாஜக வேட்பாளரைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் அத்தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.கமலக்கண்ணன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து நேற்று (ஏப்.4) இரவு செல்லூர் பகுதியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
''தேர்தல் விதிமுறைகளை மிக மோசமாக மீறக்கூடிய சூழலை பாஜக உருவாக்கியிருக்கிறது. திருநள்ளாறு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடக்கூடிய பாஜக வேட்பாளர், அவருக்காகப் பணியாற்றக்கூடிய ஒப்பந்ததாரர்கள் உள்ளிட்டோர் இணைந்து வாக்காளர்களுக்கு, தங்கக் காசுகளைக் கொடுத்து ஏமாற்றி வாக்குகளைப் பெறுவதற்காக முயற்சிகளைச் செய்து வருகின்றனர்.
ஒரு தங்கக் காசு, ரூ.2 ஆயிரம் ரொக்கம் ஆகியவை பாஜக வேட்பாளர் ஜி.என்.எஸ்.ராஜசேகரனுக்காக திருநள்ளாறு தொகுதி முழுவதும் பரவலாக வழங்கப்படுகிறது. இது ஏப்.3-ம் தேதி மாலை முதல் நடந்து வருகிறது. மக்களுக்கு அண்மைக் காலமாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டு கிடைக்கவில்லை. ஆனால் திருநள்ளாற்றில் வழங்கிக் கொண்டிருகிறார்கள். பிரதமர் மோடி படத்துடன் வைத்து தங்கக்காசு கொடுத்துள்ளனர். இது தேர்தல் விதிமுறைகளுக்கு முற்றிலும் புறம்பானது.
இதுகுறித்து நானும், என்னுடன் தேர்தல் பணியாற்றுவோரும் காரைக்கால் மாவட்டத் தேர்தல் அதிகாரி, புதுச்சேரி தலைமைத் தேர்தல் அதிகாரி, இந்தியத் தலைமைத் தேர்தல் அதிகாரி உள்ளிட்டோருக்குப் புகார் அனுப்பியுள்ளோம்.
சுரக்குடி, தேனூர், திருநள்ளாறு பகுதிகளில் சுமார் ரூ.6 லட்சம் மதிப்பிலான தங்கக் காசுகளையும், பணத்தையும் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இவை 3-ம் தேதி மாலை பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இதுகுறித்து காரைக்கால் மாவட்டத் தேர்தல் அதிகாரியாக இருக்கக்கூடிய மாவட்ட ஆட்சியர், 4-ம் தேதி இரவு வரையிலும் செய்தியாளர்களிடம் கூட ஏன் கூறவில்லை? வழக்குப் பதிவு குறித்த விவரங்களைச் சொல்லாதது ஏன்?
இதனால் தேர்தல் நியாயமாக நடைபெறுமா? மக்கள் ஜனநாயகப்பூர்வமாக வாக்களிக்கும் அனுமதி கிடைக்குமா? அல்லது பணநாயகம் வெற்றி பெறத் தேர்தல் துறை உதவியாக இருக்குமா? என்ற கேள்விகள் எழுகின்றன. வேட்பு மனுத் தாக்கல் செய்த நாளிலேயே பாஜக விதிமுறைகளை மீறியது. தமிழகப் பகுதிகளில் இருந்தெல்லாம் ஆட்களை அழைத்துக் கூட்டமாக வந்து மனுத் தாக்கல் செய்தனர்.
புதுச்சேரி தேர்தல் துறை இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் நியாயமாக நடைபெற உத்தரவாதம் அளிக்க வேண்டும். உரிய வழக்குப் பதிவு செய்து, பாஜக வேட்பாளர் தேர்தலில் போட்டியிடாதவாறு தகுதி நீக்கம் செய்ய்ய வேண்டும். இதுபோல இதுவரை புதுச்சேரியில் நடைபெற்றதில்லை. புதுச்சேரி முழுவதுமே பாஜக இவ்வாறுதான் செயல்படுகிறது''.
இவ்வாறு ஆர்.கமலக்கண்ணன் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT