Published : 05 Apr 2021 10:28 AM
Last Updated : 05 Apr 2021 10:28 AM

வாக்களிக்க ஏதுவாக நாளை தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை: கோவை தொழிலக பாதுகாப்புத்துறை வலியுறுத்தல்

கோவை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பிரிவு முதலாவது இணை இயக்குநர் எஸ்.வேணுகோபால்

கோவை

சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி நாளை (ஏப்.6) கோவை மாவட்டத் தொழிலாளர்களுக்கு ஒருநாள் ஊதியத்துடன் விடுமுறை வழங்க வேண்டும் என கோவை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பிரிவு முதலாவது இணை இயக்குநர் எஸ்.வேணுகோபால் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகம் முழுவதும் நாளை ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி ஏப்ரல் 6-ம் தேதி மாநிலம் முழுவதும் தொழிலாளர்களுக்கு பொது விடுமுறை அளித்து, ஏற்கெனவே தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் அறிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அந்தந்த மாவட்டத் தேர்தல் அலுவலர்களும் தேர்தல் நாளில் தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அளிப்பது தொடர்பாக அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வரிசையில், கோவை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பிரிவு முதலாவது இணை இயக்குநர் எஸ்.வேணுகோபால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6-ம் தேதி நடக்க உள்ளது.

அன்றைய தினம் கோவை மாவட்டம், வடக்கு தாலுகா, தெற்கு தாலுகா, அன்னூர் தாலுகா, மேட்டுப்பாளையம் தாலுகா, நீலகிரி மாவட்டம் ஆகியவற்றில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களும் (நிரந்த, தற்காலிக, ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரும்) தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றும் வகையில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி, அத்தொழிலாளர்களுக்கு 6-ம் தேதி ஒருநாள் ஊதியத்துடன் விடுமுறை வழங்க வேண்டும்.

அவ்வாறு விடுப்பு வழங்காத தொழிற்சாலைகள் மீது குற்ற நடவடிக்கை தொடரப்படும்,’’ எனக் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x