Published : 05 Apr 2021 08:41 AM
Last Updated : 05 Apr 2021 08:41 AM

வேலூர் அருகே பறக்கும் படை குழுவினரின் கார் விபத்து: பெண் தலைமைக் காவலர் உயிரிழப்பு

கே.வி.குப்பம் அருகே விபத்தில் சிக்கிய காரில் பெண் தலைமை காவலர் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்திய டிஐஜி காமினி, ஆட்சியர் சண்முகசுந்தரம், எஸ்பி செல்வகுமார். | உள்படம்: பெண் தலைமை காவலர் மாலதி.

வேலூர்

கே.வி.குப்பம் அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பறக்கும் படைக் குழுவினர் சென்ற கார் விபத்தில் சிக்கியதில் பெண் தலைமை காவலர் உயிரிழந்தார்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் விநியோகம் செய்வதைத் தடுக்கும் நோக்கில் பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழுவினர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் வாகன தணிக்கை மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்படும் பணம் மற்றும் பரிசுப் பொருட்களையும் பறிமுதல் செய்து வருகின்றனர்.

கே.வி.குப்பம் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பறக்கும் படை அலுவலர் கார்த்திகேயன் தலைமையிலான குழுவினர் நேற்று (ஏப்-04) இரவு 12மணியளவில் காட்பாடி-குடியாத்தம் சாலையில் நேராந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்தக் குழுவில் வேலூர் வடக்கு காவல் நிலைய பெண் தலைமை காவலர் மாலதி (45) மற்றும் வீடியோகிராபர் பிரகாசம் (53) இருந்தனர். இவர்கள் சென்ற காரை செல்வராஜ் என்பவர் ஓட்டிச் சென்றார்.

இவர்களின் கார் பழைய கிருஷ்ணாபுரம் (பி.கே.புரம்) கூட்டுச்சாலை அருகே சென்றபோது சாலையின் குறுக்கே திடீரென நாய் ஒன்று சென்றது. இதைப் பார்த்த ஓட்டுநர் செல்வராஜ், திடீரென பிரேக்கை அழுத்தியதுடன் வலதுபக்கம் காரை திருப்பியுள்ளார். அப்போது, எதிர் திசையில் குடியாத்தத்தில் இருந்து காட்பாடி நோக்கி சென்ற லாரி முன்பக்கத்தில் கார் பயங்கரமாக மோதியதில். நிலை தடுமாறிய கார் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதையடுத்து, லாரியில் இருந்தவர்கள் மற்றும் அந்த வழியாகச் சென்றவர்கள் காரில் இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். கார்த்திகேயன், பிரகாசம், செல்வராஜ் ஆகியோர் காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், பெண் காவலர் மாலதி பலத்த காயங்களுடன் அந்த இடத்திலே உயிரிழந்தது தெரியவந்தது. காயமடைந்தவர்கள் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்த தகவலின்பேரில், வேலூர் சரக டிஐஜி காமினி, வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார், துணை காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீதரன் உள்ளிட்டோர் விரைந்து சென்று விசாரணை செய்தனர். விபத்தில் சிக்கிய காரை மீட்டு கே.வி.குப்பம் காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக கே.வி.குப்பம் காவல் ஆய்வாளர் முரளிதரன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். விபத்தில் உயிரிழந்த பெண் காவலருக்கு ஓய்வு பெற்ற ராணுவ வீரரான செந்தில்வேலன் என்ற கணவரும், நிரஞ்சனா என்ற மகளும், தருண்குமார் என்ற மகனும் உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x