Published : 05 Apr 2021 06:24 AM
Last Updated : 05 Apr 2021 06:24 AM
கடந்த 2011-ம் ஆண்டு தொகுதி சீரமைப்பின்போது, வில்லிவாக்கம் தொகுதியில் இருந்து பிரிக்கப்பட்டு அம்பத்தூர் தொகுதி உருவாக்கப்பட்டது. தொகுதி சீரமைப்புக்கு பிறகு அம்பத்தூர் தொகுதியில் நடைபெறும் 3-வது தேர்தல் இதுவாகும். 2011, 2016 ஆகிய சட்டப்பேரவை தேர்தல்களில் அதிமுகவே வெற்றி பெற்றது.
2016-ம் ஆண்டு தேர்தலில் இத்தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட அலெக்சாண்டர், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஹசன் மவுலானாவை விட 17,498 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தற்போது, அலெக்சாண்டர் 2-வது முறையாக இத்தொகுதியில் போட்டியிடுகிறார்.
கடந்த 2011-ம் ஆண்டு இத்தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேதாச்சலம், தற்போது அமமுக சார்பில் களம் இறங்கியுள்ளார்.
இத்தொகுதி மக்களின் பயன்பாட்டுக்கு 100 படுக்கைகள் கொண்ட அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், அம்மா மினி கிளினிக், அம்மா உணவகம், அம்மா திருமண மண்டபம் ஆகியவை திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
மேலும், இத்தொகுதியில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட குளங்கள் தூர்வாரப்பட்டு நடைபாதையுடன் கூடிய பூங்காக்கள் திறக்கப்பட்டுள்ளன. அத்துடன், கள்ளிக்குப்பம் பகுதியில் 18 ஏக்கரில் சிறுவர் விளையாட்டுத் திடல், உடற்பயிற்சிக் கூடம், பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவையெல்லாம் தனது பதவிக் காலத்தில் செய்யப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் என கூறி அலெக்சாண்டர் வாக்குச் சேகரித்து வருகிறார்.
அதேசமயம், சென்னை- திருவள்ளூர் தேசிய நெடுஞ்சாலையில், பாடி முதல் திருநின்றவூர் இடையே சாலையை அகலப்படுத்தாமல் இருப்பதால் போக்குவரத்து நெரிசலாகிறது; சாலையை அகலப்படுத்த வேண்டும் என இந்த தொகுதி மக்கள் கடந்த 20 ஆண்டு காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வேண்டும். பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள பாதாள சாக்கடை திட்டத்தை விரைவாக நிறைவேற்ற வேண்டும். அம்பத்தூர் உழவர்சந்தை அருகே மேம்பாலம் அமைக்க வேண்டும். விமான நிலையத்துக்கு செல்ல மெட்ரோ ரயில் வசதி, அம்பத்தூர் தொழிற்பேட்டை சாலையில் நடைமேம்பாலம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்டவை முக்கியக் கோரிக்கைகளாக உள்ளன.
திமுக சார்பில் போட்டியிடும் ஜோசப் சாமுவேல், திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள மக்கள் நலத் திட்டங்களை செயல்
படுத்துவதுடன், அம்பத்தூர் தொகுதியில் அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றி தருவதாகக் கூறி தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
இத்தொகுதியில் அமமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ வேதாச்சலம், தான் எம்எல்ஏவாக பதவி வகித்த காலத்தில், இத்தொகுதிக்குச் செய்த பல்வேறு திட்டங்களை எடுத்துக் கூறி பிரச்சாரம் செய்து வருகிறார்.
மேலும், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வைத்தீஸ்வரன், நாம் தமிழர் கட்சி சார்பில் அன்பு தென்னரசன் போட்டியிடுகின்றனர். இவர்கள் முதல்தலைமுறை வாக்காளர்கள், இளைஞர்களை குறி வைத்து வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
எனினும், அம்பத்தூர் தொகுதியில் அதிமுக, திமுகவுக்கு இடையே மட்டுமே நேரடி போட்டி நிலவுகிறது. இதில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது வாக்காளர்களின் கையில்தான் உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT