Published : 05 Apr 2021 03:14 AM
Last Updated : 05 Apr 2021 03:14 AM

எல்லா எதிர்ப்புகளையும் மீறி - திமுக கூட்டணி வெற்றி சிகரத்தை எட்டும்: கே.எஸ்.அழகிரி நம்பிக்கை

திருநெல்வேலியில் நேற்று இறுதி கட்ட பிரச்சாரம் செய்வதற்காக வந்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களிடம் பேசினார். படம்: மு.லெட்சுமி அருண்

திருநெல்வேலி

“எல்லா எதிர்ப்புகளையும் மீறி திமுக கூட்டணி வெற்றி சிகரத்தை எட்டும். சுமார் 200 இடங்களில் வெற்றி பெறுவோம்” என்று, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.

திருநெல்வேலியில் நேற்று இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்த தேர்தல் மிகவும் முக்கியமானது. மக்கள் ஆட்சி மாற்றம்வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதிமுக ஆட்சியில் தொழில்துறை, விவசாயத் துறையில் மிகப் பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது. வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளது.

ஏற்புடையதல்ல

தமிழகத்தின் உரிமைகளை மீட்பதும், தமிழர்களின் சுயமரியாதையை பாதுகாப்பதும், டெல்லியின் அதிகாரம் இங்குகொடிகட்டி பறப்பதை தடுப்பதும்தான் எங்கள் நோக்கம். பிரதமர்மோடி தமிழகத்தில் பேசிய கூட்டங்களில் நாட்டின் வளர்ச்சி, தொழில்துறை வளர்ச்சி, வேலைவாய்ப்பை உருவாக்குதல் குறித்து எதுவும் சொல்லவில்லை. சாதாரண மேடைப் பேச்சாளர்போல் அவர் உள்ளூர் அரசியலை பேசியிருக்கிறார்.

உள்துறை அமைச்சர் அமித் ஷா நாட்டின் பாதுகாப்பு, சட்டம், ஒழுங்கு எப்படி இருக்கிறது என்பதைப் பற்றி பேச வேண்டும். ஒரு கட்சியை குடும்பக் கட்சி என்றோ, குடும்பத்தை மேம்படுத்துகிறார்கள் என்றோ சொல்வது ஏற்புடையதல்ல. தலைவர்களுடைய பிள்ளைகள் அந்த கட்சியில் இருப்பதுதான் பெருமை.

தேர்தல் ஆணையம் கடந்த 3 தேர்தல்களில் தோல்வியை சந்தித்துள்ளது. வியாபாரிகள், விவசாயிகளிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்கிறார்கள். பெருமளவில் பண பலத்தோடு செல்லும் ஆளுங்கட்சி ஆட்கள் பிடிபடுவதில்லை. எல்லா எதிர்ப்புகளையும் மீறி எங்கள் கூட்டணி வெற்றி சிகரத்தை எட்டும். சுமார் 200 இடங்களில் நாங்கள் வெற்றி பெறுவோம்.

வேலையின்றி தவிப்பு

குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தருவோம் என்று அதிமுக கூறுகிறது. வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 66 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக பதிவு செய்து காத்திருக்கின்றனர். அதிமுக ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை பேருக்கு அரசு வேலை வழங்கப்பட்டது என்று வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா?.

மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 108 டாலராக இருந்தபோது, பெட்ரோல் விலை 70 ரூபாய். இப்போது கச்சா எண்ணெய் விலை 54 டாலர். ஆனால் பெட்ரோல் விலை 100 ரூபாய். பெட்ரோல் விலை இப்போது 35 ரூபாய்க்கு விற்பனை செய்ய வேண்டும். எரிவாயு சிலிண்டர் 200 ரூபாய்க்கு விற்பனை செய்ய வேண்டும். ஆனால் அப்படி செய்யவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x