Published : 05 Apr 2021 03:15 AM
Last Updated : 05 Apr 2021 03:15 AM

‘தமிழகத்தில் சிறப்பாக ஆட்சி செய்ய ஒரு வாய்ப்பு தாருங்கள்’- கொளத்தூரில் பிரச்சாரத்தை நிறைவு செய்தார் மு.க.ஸ்டாலின்

சென்னை

சென்னை கொளத்தூர் தொகுதியில் நேற்று பிரச்சாரத்தை நிறைவு செய்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் சிறப்பாக ஆட்சி செய்ய தமக்கு ஒரு வாய்ப்பு தருமாறு வேண்டுகோள் விடுத்தார். அப்பகுதி மக்கள் அவருடன் உற்சாகமாக செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

திருவாரூரில் கடந்த மார்ச் 15-ம்தேதி தேர்தல் பிரச்சாரத்தை ஸ்டாலின் தொடங்கினார். திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் 234 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக கடந்த 20 நாட்களாக தமிழ்நாடு முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்ட ஸ்டாலின், நேற்று சென்னை மாநகரின் பல்வேறு தொகுதிகளில் பிரச்சாரம் செய்தார்.நேற்று, தான் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் பிரச்சாரத்தை நிறைவு செய்து மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

கடந்த ஐம்பது ஆண்டுகாலமாக தமிழ்நாட்டு மக்களுடன் என்னுடைய வாழ்க்கை இரண்டறக் கலந்துள்ளது. ஆளும்கட்சியாக இருந்தபோது மக்களுக்குத் தேவையான நல்ல திட்டங்களைச் செய்திருக்கிறேன். எதிர்க்கட்சியாக இருந்த போது மக்களுடைய தேவைகளுக்காக வாதாடியிருக்கிறேன். எந்த நிலையில் இருந்தாலும், மக்களுக்காக மக்களோடு இருக்கிறவன் நான்.

14 வயதில் கோபாலபுரம் இளைஞர் திமுகவை ஆரம்பித்து, மக்கள் பணியாற்றத் தொடங்கியவன் நான். இந்த ஐம்பது ஆண்டுகாலத்தில் தமிழ்நாட்டில் என்னுடைய கால் படாத கிராமமே இல்லை. நான் பயணம் செய்யாத நகரமே இல்லை.

தமிழ்நாட்டின் எந்தப் பகுதி மக்களுக்கு எந்தப் பாதிப்பு ஏற்பட்டாலும் முதலில் நீளுகிற உதவிக்கரம் என்னுடையதுதான். அந்த வகையில் தமிழ்நாட்டுக்கும் நாட்டுமக்களுக்கும் இன்னும் பல ஆண்டுகள் உழைக்க நான் காத்திருக்கிறேன். தமிழ்நாட்டு மக்களின் மேன்மைக்காக நல்ல பல திட்டங்களை நான் வைத்திருக்கிறேன். அந்தத் திட்டங்களை நிறைவேற்றித் தருவதற்கு எனக்கு ஒரு வாய்ப்புத் தாருங்கள்.

திமுக தேர்தல் அறிக்கையில் 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்துக்குமான செயல்திட்டங்கள் கொண்ட தேர்தல் அறிக்கையையும் நான் வெளியிட்டிருக்கிறேன். இவற்றை நிறைவேற்றினால் தமிழகம் ஒளிமயமானதாக அமையும். தமிழ்நாட்டின் எதிர்காலம் வண்ண மயமானதாக மாறும். அப்படி மாற்றிக் காட்டுவதற்கு எனக்கு வாய்ப்பளியுங்கள்.

கடந்த மார்ச் 15-ம் தேதி திருவாரூரில் நான் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினேன். இன்றைக்கு நான் போட்டியிடுகிற கொளத்தூரில் என்னுடைய பயணத்தை நிறைவு செய்கிறேன்.

தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும், புதுச்சேரி மாநிலத்தின் 30 தொகுதிகளிலும், இந்த 21 நாட்களில் 70 கூட்டங்களில் பேசிஇருக்கிறேன். 12 ஆயிரம் கிலோமீட்டர் பயணம் செய்திருக்கிறேன். ஒவ்வொரு ஊரிலும் பல்லாயிரக்கணக்கான மக்களைப் பார்க்கிறேன். இந்த ஆட்சிக்கு எதிரான மக்களின் கோப அலையை சுனாமியாகப் பார்க்கிறேன்.

மக்களுடைய கோரிக்கைகளை 100 நாள்களில் நிறைவேற்றிக் காட்ட என்னால் முடியும் என்று வாக்குறுதி அளித்திருக்கிறேன். அதற்கான அத்தாட்சி ஆவணத்தையும் உங்களிடம் நான் வழங்கியிருக்கிறேன்.

முதல் 100 நாளில் தீர்க்கப் போகும் பிரச்சினைகள், ஐந்தாண்டு காலத்தில் உருவாக்கப்படக் கூடிய திட்டங்கள் , பத்தாண்டு காலத்தில் முன்னெடுக்க வேண்டிய பணிகள்என எனக்கு நானே வரையறைகளைத் தீட்டி வைத்துக் கொண்டு உங்களிடம் வாக்குக் கேட்கிறேன்.

திமுக கூட்டணிக்கு வாக்களிப்பதன் மூலமாக, தமிழ்நாட்டு மக்கள் தங்களது எதிர்காலத்தை ஒளிமயமானதாக ஆக்கிக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஏப்ரல் 6-ம் நாள் உங்கள் கையில் உள்ள அரசியல் அதிகாரத்தை அதிமுகவுக்கு எதிராகப் பயன்படுத்துங்கள். அதன் மூலம் அதிமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்.

ஏப்ரல் 6 என்பது தமிழகத்தின் பத்தாண்டு கால ஏக்கம் தீரும் நாள். மே 2 என்பது தமிழகத்தின் மாபெரும் வளர்ச்சியின் தொடக்க நாள். நிச்சயமாக திமுக ஆட்சி மலரும். உங்கள் கவலைகள் யாவும் தீரும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

கொளத்தூர் தொகுதியில் நேற்று பிரச்சாரம் செய்த மு.க.ஸ்டாலின், பெரவள்ளூர் சதுக்கம்பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக் கூட்டத்தில் பேசுவதற்காக, சாலையில் நடந்து சென்றார். அப்போது அங்கே கூடியிருந்த பெண்கள் ஸ்டாலினுடன் ‘செல்ஃபி’எடுத்துக் கொண்டனர். ஏராளமானோர் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள, அங்கே கூடியிருந்தவர்கள் பொதுமக்களும், தொண்டர்களும் உற்சாகம் அடைந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x