Published : 05 Apr 2021 03:16 AM
Last Updated : 05 Apr 2021 03:16 AM
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் இருமுனைப் போட்டி நிலவுகிறது.
திருவண்ணாமலை மாவட் டத்தில் 8 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. அனைத்து தொகுதிகளிலும் அதிமுக மற்றும் திமுக இடையே நேரடி போட்டி நிலவுகிறது. தலைவர்கள் பிரச்சாரம், கவனிப்பு போன்ற காரணங்களால், அக்கட்சிகளின் வேட்பாளர்கள் மிகுந்த நம்பிக் கையுடன் வலம் வருகின்றனர். அவர்களது செல்வாக்குக்கு ஈடு கொடுக்க முடியவில்லை என்றாலும் அமமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சிகள் கணிசமான வாக்குகளை பெற்று, தங்களது செல்வாக்கை நிரூப்பிக்கக் கூடும். இதனால், வெற்றி, தோல்விகளில் மாற்றம் நிகழவும் வாய்ப்பு இருக்கிறது.
திருவண்ணாமலை
கூட்டணி பலத்துடன் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு களத்தில் உள்ளார். தேர்தல் அனுபவம், எதிரணியில் உள்ள அதிருப்தியாளர்களை அரவணைப்பது போன்ற காரணங்கள், அவருக்கு சாதகமாக அமைகிறது. அதிமுகவை விமர்சிப்பதை தவிர்த்து, தன்னை எதிர்த்து போட்டியிடும் பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளார். இவருக்கு எதிராக களத்தில் உள்ள பாஜக வேட்பாளர் தணிகைவேல், மத்திய, மாநில அரசுகளின் சாதனைகள் கைக் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளார். அவருக்கு கூட்டணி கட்சிகள், முழுமையாக ஒத்துழைப்பு அளித்தால் போட்டி கடுமையாக இருக்கும்.
செங்கம் (தனி)
இரண்டாவது முறையாக களம் காணும் திமுக வேட்பாளர் மு.பெ.கிரி, அதிமுக மீதான அதிருப்திகளை மக்கள் மன்றத்தில் முன் வைத்துள்ளார். கூட்டணி மற்றும் சொந்த கட்சியில் உள்ள அதிருப்தியாளர்களை எதிர் கொண்டு வெற்றி பெற போராடி வருகிறார். இவருக்கு எதிராக களத்தில் உள்ள அதிமுக வேட்பாளர் நைனாக்கண்ணு, மக்களிடம் நெருங்கி பழகக் கூடியவர் என்ற நற்பெயர் உள்ளது. முதல் முறையாக களம் காணும் இவர், அதிமுக அரசின் சாதனைகளை கூறி வாக்குகளை பெற தீவிரம் காட்டினார். அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண் டர்கள் ஒத்துழைப்பு இருப்பதால் நம்பிக்கையுடன் இருக்கிறார்.
கலசப்பாக்கம்
அதிமுக எம்எல்ஏ பன்னீர்செல்வம் மீண்டும் போட்டியிடுகிறார். அனைத்து கிராமங்களுக்கு சென்று அரசின் திட்டங் களை செயல்படுத்தி உள்ளார். வேலைவாய்ப்பு முகாம், போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டுள்ளார். இவருக்கு, முன்னாள் அதிமுக ஒன்றியச் செயலாளர் திருநாவுக்கரசு சுயேட்சையாக போட்டியிடுவது நெருக்கடியை ஏற்படுத்திஉள்ளது. மேலும், பன்னீர் செல்வத்துக்கு எதிராக, அதிமுகவில் உள்ளடி வேலைகளும் நடைபெறுவதால், அதனை சமாளித்து கரை சேர வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
இந்த தொகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு பிறகு திமுக போட்டியிடுவதால், அக்கட்சி யின் வேட்பாளர் சரவணன் நம்பிக் கையுடன் இருக்கிறார். முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் கம்பனின் மேற்பார்வையில், தேர்தல் பணி நடைபெறுவதால் தனக்கு சாதகமான சூழ்நிலை ஏற்படும் என்ற மன உறுதியுடன் வலம் வருகிறார்.
போளூர்
அதிமுக முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி களத்தில் உள்ளார். அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளை சரியாக வழி நடத்தி வருகிறார். வன்னியர்கள் கணிசமாக உள்ளதால், கடந்த தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு கணிசமான வாக்குகளை பெற்ற ஏழுமலை (தற்போது பாஜகவில் உள்ளார்) மற்றும் பாமகவின் ஆதரவு தேவைப்படுகிறது. இவருக்கு எதிராக களத்தில் உள்ள திமுக வேட்பாளர் சேகரன் எம்எல்ஏ, 2-வது முறையாக போட்டியிடுகிறார். அதிமுக மீதானஅதிருப்தி, தனக்கு சாதகமாக அமையும் என்ற நம்பிக்கையில் வாக்குப்பதிவை எதிர் கொண்டுள்ளார்.
ஆரணி
செல்வாக்குடன் களம் இறங்கி உள்ள அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், தொகுதிக்கு செய்துள்ள திட்ட பணிகளை பட்டியலிட்டு மக்களை சந்தித்துள்ளார். ஆரணியை தலைமை யிடமாக கொண்டு புதிய மாவட்டம் என்ற முதல்வரின் அறிவிப்பு தனக்கு சாதகமாக அமையும் என நம்புகிறார். பாமகவினரின் ஒத்துழைப்பை பெற அன்புமணி ராமதாஸை வரவழைத்து பிரச்சாரம் செய் துள்ளது கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. இவருக்கு எதிராக உள்ள திமுக வேட்பாளர் அன்பழகன், புதியவர் என்பதால் அதிருப்தி ஏதும் இல்லாமல் மக்களை சந்தித்துள்ளார். திமுக வினர் ஒத்துழைப்பு, எ.வ.வேலு வழிகாட்டுதல் ஆகியவை தனக்கு சாதகமாக அமையும் என்ற நம்பிக்கையுடன் உள்ளார்.
செய்யாறு
கடந்த 15 ஆண்டுகளுக்கு பிறகு திமுக களம் காண்கிறது. அக்கட்சி சார்பில் போட்டியிடும் ஜோதி, முதல் முறையாக போட்டியிடுகிறார். இதனால் அவர் மீது அதிருப்தி ஏதும் இல்லை. 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் நடைபெற்றுள்ள மக்களுக்கு எதிரான திட்டங்கள் எனக் கூறி, மக்கள் மன்றத்தில் பட்டியலிட் டுள்ளார்.
கடந்த 15 ஆண்டுகளுக்கு பிறகு உதயசூரியன் போட்டியிடுவதால் திமுகவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். இதனால், அவர்களது ஒத்துழைப்பு முழுமையாக கிடைத்துள்ளது. கூட்டணி கட்சிகள் பலமும் அவருக்கு உள்ளது. அவருக்கு எதிராக, அதிமுகவைச் சேர்ந்த தூசி கே.மோகன் எம்எல்ஏ 2-வது முறையாக களத்தில் உள்ளார். அவருக்கு எதிராக, வேட்பாளரை மாற்றக்கோரி அதிமுகவினர் நடத்திய போராட்டம், பின்னடைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. உள்ளடி வேலைகள் அதிகம் நடைபெறுவதால் எதிர்நீச்சல் போட்டு வருகிறார்.
கீழ்பென்னாத்தூர்
திமுக முன்னாள் அமைச்சர் பிச்சாண்டி, மீண்டும் போட்டி யிடுகிறார். தொகுதியில் நடைபெறும் அனைத்து சுப, துக்க நிகழ்ச்சிகளில் தவறாமல் பங்கேற்றுள்ளது பலமாக பார்க் கப்படுகிறது. மேலும், கிராம மக்களின் தேவையை கேட்டறிந்து அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார். மக்களின் எதிர்ப்பு இல்லாமல் இருந்தாலும், வன்னியர்கள் நிறைந்த தொகுதி என்பதால் தன்னை எதிர்த்து களம் காணும் பாமக வேட்பாளருக்கு ஈடு கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. வன்னியர் பலம் மற்றும் அதிமுக பலத்தை நம்பி களத்தில் உள்ள பாமக வேட்பாளர் செல்வகுமாருக்கு, வெளியூர்காரர் என்ற விமர்சனம் எழுந்துள்ளது. அதனை எதிர்கொண்டு கரை சேர போராடி வருகிறார்.
வந்தவாசி (தனி)
திமுக எம்எல்ஏ அம்பேத்குமார் மீண்டும் போட்டியிடுகிறார். தொகுதியில் உள்ள சில பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்பட்டு வந்துள்ளார். தொடர்ந்து 2-வது முறையாக அவருக்கு வாய்ப்பு கொடுத்து இருப்பது, திமுகவினர் மத்தியில் அதிருப்தி நிலவியது. அதனை, எ.வ.வேலு மூலமாக சரி செய்துள்ளார். அவருக்கு எதிராக, பாமக சார்பில் போட்டியிடும் முரளி, முதன் முறையாக களம் காண்கிறார். இவரும் வெளியூர்காரர் என்ற முத்திரையை திமுக தரப்பில் குத்தப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT